தமிழ் சினிமாவில் இருந்து மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கு பல நடிகைகள் செல்கின்றனர். அதுபோல் மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் இருந்து தமிழ் மொழி படங்களிலும் நடிக்க பல நடிகைகள் வருகின்றனர். ஆனால் இந்த அளவுக்கு பிற மொழி நடிகர்கள், ஒரு சிலரைத் தவிர மற்ற மொழி படங்களில் அதிகமாக பிரகாசிப்பதில்லை.
அந்த வகையில் நயன்தாரா, ரோஜா, அம்பிகா, ராதா, அனுஷ்கா ஷெட்டி, மீரா ஜாஸ்மின், சாய்பல்லவி பிற மொழிகளில் இருந்து தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்கள். இப்போது நயன்தாரா தமிழில் இருந்து இந்தி படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் மனம் கவர்ந்த அனுஷ்கா, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
அதுபோல், தமிழில் சாட்டை படம் மூலம் 12 ம் வகுப்பு மாணவியாக நடித்தவர் மஹிமா நம்பியார். கடந்த 2012ம் ஆண்டில், அன்பழகன் டைரக்ட் செய்த சாட்டை என்ற படம்தான் தமிழில் இவரது முதல் படம். இந்த படத்தில் சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருப்பார். தம்பி ராமையா வில்லன் கேரக்டரில் நடித்த இந்த படம், நல்ல வரவேற்பை பெற்ற வெற்றிப்படமாக பேசப்பட்டது.
அதன்பிறகு குற்றம் 23, கொடிவீரன், ரத்தம், ஆர்டிஎக்ஸ், 800 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹிமா நம்பியார். மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு வந்தாலும், நடிப்பில் நல்ல முகபாவனைகளை, உடல்மொழிகளை வெளிப்படுத்தி நடிப்பதால் இவரது நடிப்பை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு மொழியில் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. மஹிமா நம்பியாரும் அந்த படத்தில் 4 நாட்கள் நடித்த நிலையில், சில நாட்கள் கழித்து நடிக்கலாம் என ஓய்வில் இருந்துள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் போது உடல் நல பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் இதுபோல் நடிகர், நடிகையர் பிரேக் எடுத்துக்கொண்டு தான் மீண்டும் நடிக்கின்றனர்.
அப்படி அவர் ஓய்வில் இருந்தபோது அந்த படக் கம்பெனியில் இருந்து போனில் அழைத்துப் பேசிய மேனேஜர், இந்த படத்தில் இருந்து உங்களை நீக்கி விட்டோம். நீங்கள் நடித்த கதாநாயகி கேரக்டரில் வேறு ஒரு பெரிய நடிகை நடிக்க ஒத்துக்கொண்டு விட்டார். அதனால், இந்த படத்தில் இருந்து உங்களை நீக்கி விட்டோம் என, வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.





