தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த ஆண்டில் லால் சலாம், வேட்டையன் என அவரது 2 படங்கள் வெளியாகின. இதில் வேட்டையன் 265 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்தது. அடுத்து இப்போது கூலி படத்தில் ரஜினி பிஸியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தளபதி. தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக தளபதி இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் ஷோபனா ஸ்ரீவித்யா அரவிந்த்சாமி பானுப்பிரியா நாகேஷ் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தளபதி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ராக்கம்மா கையத்தட்டு, காட்டுக்குயிலு மனசுக்குள்ள போன்ற பாடல்கள், அப்போது ஒலிக்காத இடங்களே இல்லை என்றும் சொல்லலாம்.
தளபதி படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்களால் இப்போதும் தளபதி படம் ரசிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த 170 படங்களில் தளபதி படத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இப்போது நட்புக்கு உதாரணமாக தளபதி படத்தில் வருகிற ரஜினி, மம்முட்டி இவர்களா, என்று கூட சிலர் கலாய்த்து சொல்வதுண்டு.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று தளபதி படம், தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. டிவியில் பலமுறை காட்டப்பட்ட இந்த படத்துக்கு, இப்போதும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. ஏறக்குறைய 34 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தளபதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட முதல் 2 நாட்களில் 1.4 கோடி ரூபாய் வசூல் செய்தது, 3வது நாள் முடிவில் வசூல் ரூ. 2 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தளபதி விஜய் படத்துக்கு வருவது போலவே 34 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரஜினி நடித்த தளபதி படத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவதால், பழைய தளபதிக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.





