கோலிவுட் திரை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. படத்துக்கு படம் தான் யார் என்பதை பாக்ஸ் ஆபிஸில் நிரூபித்து வரும் விஜய்க்கு, அடுத்ததாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் மீண்டும் உருவாகி உள்ள இந்தத் திரைப்படத்தை, செவன் ஸ்டார் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
தனது முந்தைய திரைப்படமான விக்ரமில் எல் சி யு கான்செப்ட்டை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் கைதி படத்தின் கார்த்தியின் கேரக்டரும் வர, கிளைமாக்ஸில் சூர்யாவும் இடம்பெற்றதால் விக்ரம் பலருக்கும் பிடித்துப் போனது. இதன் தொடர்ச்சியாக, லியோவிலும் எல் சி யு கான்செப்ட் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்து, திடீரென ரத்தானது. இதனால் சோகமடைந்த விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக லியோவில் இருந்து இரண்டாம் பாடலை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது.
இதில் காஷ்மீரில் அமைதியான வாழ்க்கை வாழும் பார்த்தியாக விஜய் வருகிறார். தனது மனைவி திரிஷா மற்றும் குழந்தையுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழும் பார்த்தியை சில கும்பல் துரத்துவது போல ட்ரெய்லர் அமைந்துள்ளது. முன்னதாக லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்காக, சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.
திரையரங்குகளில் ஆடி பாடி அவர்கள், எல்லை மீறி அங்கிருந்து இருக்கைகளை அடித்து நொறுக்கினர். ஏராளமான இருக்கைகள் சேதமடைந்து நிலையில், இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் இவ்வளவு கேவலமாக நடந்திருக்க வேண்டாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளாராம். சம்பவத்தன்று நடந்தது குறித்தும் அவர் கேட்டிருந்தாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





