இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மாநகரில் வசிக்கும் இளைஞர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுடனே கலந்த கிரிக்கெட் விளையாட்டையும் மையப்படுத்தி கதை எழுதிய வெங்கட் பிரபு, தனது முதல் படத்திலேயே சிக்சர் விளாசினார்.
பிறகு திரில்லர் திரைப்படமான சரோஜா, கலகல திரைப்படமாக கோவாவை எடுத்த அவர், அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார். ஏகே வின் 50-வது திரைப்படமாக உருவாகிய மங்காத்தா, பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க ஊர் மெச்சும் இயக்குனர் ஆனார் வெங்கட் பிரபு.
பிறகு கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி எடுத்த வெங்கட் பிரபு, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு மாநாட்டில் முடி சூடிய இயக்குனர் ஆனார் வெங்கட் பிரபு.
இதையடுத்து அவர் இயக்கிய மன்மத லீலை மற்றும் கஸ்டடி திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இப்படியான சூழலில் தான், விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. லியோவை தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கெட்டப்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தந்தை விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் அல்லது சினேகா நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. இதுபோக நடிகர் ஜெய்யும் படத்தில் உள்ளார். மேலும் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இது தொடர்பாக பிரசாந்திடம் படக்குழு பேசியதாக அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தளபதி 68-ல் பாலிவுட்டில் இருந்து மிகப்பெரிய நட்சத்திரத்தை நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். ஜெயிலர் திரைப்படத்தின் திரைக்கதை சுமாராக இருந்தாலும், அதில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கதாபாத்திரங்கள் சரியான இடத்தில் வந்ததால் அந்தத் திரைப்படம் பேன் இந்தியா அளவில் வெற்றி பெற்றது. இதனால் நெல்சன் ரூட்டை பிடித்திருக்கும் வெங்கட் பிரபு, தளபதி 68-ல் அமீர்கான் அல்லது ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். இவர்களுக்கு மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் எழுதியிருக்கிறாராம். இந்த இருவரில் யார் விஜயுடன் இணைய போகிறார்கள் என்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





