தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த அவர், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கோலிவுட்டில் ஏகப்பட்ட சாதிய திரைப்படங்கள் வந்து குவிய, முதல் முறையாக தலித் சமூகத்தை வைத்து பா ரஞ்சித் படங்களை எடுத்தார்.
இதற்கு முந்தைய காலத்தில் தலித் சமூகத்தை வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அவை பா ரஞ்சித்தின் பார்வையில் இருந்து வேறுபட்டவையாகவே இருந்தன. இதனாலேயே, இங்கு பா ரஞ்சித் தேவைப்படுகிறார் என்று பலரும் கூறி வந்தனர். முதல் திரைப்படத்திலேயே தலித் இளைஞனின் காதலை அருமையாக காட்சிப்படுத்தியிருந்த இயக்குநரை பலரும் பாராட்டினர்.
இதற்கு அடுத்த திரைப்படம் தான் பா ரஞ்சித்தின் திரையுலக பயணத்தில் மைல் கல் என்று கூறலாம். ஒரு சுவற்றை வைத்து அதன் பின்னால் இருக்கும் அரசியலை தோலுரித்துக் காட்டி, நாம் பார்க்காத மெட்ராசை கண்முன்னே காட்சிப்படுத்தினார் பா ரஞ்சித். காளி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க, சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்த பார ரஞ்சித், கபாலி காலா என இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். இந்த திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன்பிறகு, ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை அவர் இயக்கினார்.
குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பழங்கால மெட்ராஸை கண்முன்னே காட்சிப்படுத்திய பா ரஞ்சித், ஒவ்வொரு சீனையும் செதுக்க அருமையாக திரைப்படம் வந்திருந்தது. இந்த நிலையில் தற்போது, விக்ரமை வைத்து தங்கலான் எனும் படத்தை அவர் இயக்கி வருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு கோலார் தங்க வயலில் நிகழ்த்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்கு பிறகு சர்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை ரஞ்சித் எடுக்க இருக்கிறார். பிறகு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தியுடன் அவர் மீண்டும் இணைகிறார். பிறகு கமல்ஹாசன் உடன் படம் எடுக்கும் திட்டத்திலும் ரஞ்சித் ஈடுபட்டு இருக்கிறார். இது போக, தனது கனவு திரைப்படமான ஜெர்மன் படத்தை எடுக்கவும் ரஞ்சித் முயற்சி எடுத்து வருகிறார். இதில் சூர்யா கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களால் பா ரஞ்சித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





