தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அவரது இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் அட்டக்கத்தி, தினேஷ் கலையரசன் நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. காமெடி காதல் ஜானரில் இந்த படம் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட அவரது படங்கள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் ஆதரவை பெற்றன. ரஜினிகாந்த் நடித்த 2 படங்களை அவர் தொடர்ந்து இயக்கியதால் நட்சத்திர இயக்குனராக தமிழ் சினிமாவில் அவரது அந்தஸ்தும் உயர்ந்தது.
கடைசியாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் தங்கலான். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு தெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இப்போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஆர்யா நடிப்பில் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை அவரே முதல் பிரதி என்ற அடிப்படையில் தனது நீலம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தும் வருகிறார். வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் வாகன விபத்தில் இறந்தது சர்ச்சைகளை கிளப்பியது. இப்போது பா ரஞ்சித் தயாரிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள தண்டகாரண்யம் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற ஒரு படமாக உள்ளது.
இந்நிலையில் தண்டகாரண்யம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் பா ரஞ்சித், படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது இயக்குனர் பா ரஞ்சித் வேட்டுவம் படம் குறித்து கூறியதாவது, நான் முதலில் வேட்டுவம் படத்தை ஒரு கேங்ஸ்டர் கதையாக தான் எழுதினேன். ஆனால் இந்த படத்தை ஏன் உருவாக்க வேண்டும் என எனக்குள் கேள்வி எழுந்தது.
அந்த படம் சொல்ல வருவது அதிகார பகிர்வு பற்றிதான். அதனால் அதன் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஒரு உலகத்துக்கு கதையை மாற்றினேன். எதிர்காலத்தில் நடக்கும் ஒரு அறிவியல் புனைவு கதையாக தான் வேட்டுவம் உருவாகி வருகிறது. பார்வையாளர்கள் கொண்டாடக் கூடிய ஒரு நல்ல படமாக வேட்டுவம் படம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கிறார்.





