தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. இவரது 25வது திரைப்படமாக எடுக்கப்பட்ட ஜப்பான் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. பிறகு 96 பிரேம்குமார் உடன் அவர் கைகோர்த்து மெய்யழகன் திரைப்படத்தில் நடித்தார். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் கூட்டணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மெய்யழகன் திரைப்படத்தை பலரும் பாராட்டினார்கள். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை உணர்ச்சி பெருக்குள்ள காட்சிகளை சரியான இடத்தில் வைத்து சபாஷ் போட வைத்திருந்தார் இயக்குனர் பிரேம்குமார். இதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் கார்த்தி.
சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்த நளன் குமாரசாமிதான் இதனை இயக்கியிருக்கிறார். படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் கார்த்தி வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில், படத்தின் சூட்டிங் மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மார்ஷல் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே தமிழ் இயக்கத்தில் வெளியான டானாகாரன் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக கார்த்தி – தமிழ் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
1960களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுக்க இருக்கிறார்கள். இதில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக வருகிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவரிடம் இயக்குனர் ஆவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் கூறிய கார்த்தி, ஒருவேளை நான் இயக்கத்திற்கு சென்று விட்டால் அதில் கதை மிகவும் முக்கியம் என்று எண்ணுகிறேன். நான் சொல்ல வேண்டும் என நினைக்கும் கதை கிடைக்கும்போது நிச்சயம் அதை இயக்குவேன். மலையாளத்தில் கும்பலாகி நைட்ஸ் போன்று என்னால் எடுக்க முடிந்தால் நான் மிகவும் பெருமை அடைவேன். அதனால் அந்த மாதிரி கதை கிடைக்கும்போது நான் நிச்சயம் பண்ணுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.





