தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எத்தனையோ தலித் படங்கள் வெளிவந்தாலும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியலையும் சாதி பாகுபாட்டையும் சாட்டையடியாக பதிவு செய்து உரக்க கூறியவர் இயக்குனர் பா ரஞ்சித். ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த அவர், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே சென்னையைச் சுற்றியுள்ள தலித் மக்களின் வாழ்வியல் முறையையும், ஒரு இளைஞரின் கலாட்டவான காதலையும் சுவாரசியமாக கூறியிருந்தார் பா ரஞ்சித். முதல் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனது அடுத்த படத்தில் அவர் கார்த்தியுடன் இணைந்தார்.
ஒரு சுவரும், அதற்குப் பின்னால் இருக்கும் சாதி அரசியலையும் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் நம் கண் முன்னே அவர் காட்சிப்படுத்தி இருந்தார். காதல் நட்பு சாதி அரசியல் என அனைத்து விதமான விஷயங்களும் கலந்து கட்டி இருந்த இந்த திரைப்படம் கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் பா ரஞ்சித்திற்கும், ரஜினியுடன் இணையும் வாய்ப்பாக மெட்ராஸ் திரைப்படம் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த பா ரஞ்சித், கபாலி காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி, எதிர்பார்த்த வரவேற்பைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது. வசூல் ரீதியாக படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் ரசிகர்களை இது தவறவில்லை. பா ரஞ்சித் அடுத்து எடுத்த காலா திரைப்படமும் விமர்சன ரீதியாகவே வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் சர்பட்டா பரம்பரை என்னும் மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த அவர், தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை எடுத்து வருகிறார். கோலார் தங்க வயலில் சுதந்திரத்திற்கு முன்பு நடந்த கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில், பார்வதி மேனன் மாளவிகா மோகனன் பசுபதி என ஏராளமான நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த படம் வெளியாகிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா கூறியிருப்பதாவது, தங்கலான் படத்தின் டீசரை இந்தி திரை உலகில் மிக முக்கியமான ஒரு நடிகரிடம் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் பா ரஞ்சித்தை சந்திக்க வேண்டும் என்று கூறினார். ரஞ்சித்தை வைத்து இந்தி படம் எடுப்பது தொடர்பான வேலை சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். சமீபத்தில் பாலிவுட்டிற்கு சென்று ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அட்லியின் ஜவான் திரைப்படம் பெற்றது. தற்போது அவரைத் தொடர்ந்து பா ரஞ்சித்தும் பாலிவுட்டிற்கு செல்ல இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





