நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படங்களில் சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற, அவரது பெயர் சொல்லும் படங்களாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக நாயகன், தேவர்மகன், குணா, இந்தியன், அவ்வை சண்முகி, 16 வயதினிலே, அபூர்வ சகோதரர்கள் என குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதில் குணா படம், சந்தானபாரதி இயத்தில் 1991ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடலும், குணா குகையும் இந்த படத்தில் முக்கிய அம்சங்களாக அமைந்தன. இப்போதும் இந்த படம் கமலின் நடிப்பில் பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பல ஆண்டுகளுக்கு முன் வந்த வெற்றிப் படங்கள் பலவும் ரி ரிலீஸ் செய்யப்படுகிற நிலையில், கமல் நடித்த குணா படத்தையும் ரி ரிலீஸ் செய்ய பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்தன. குணா படம் மீண்டும் திரைக்கு வரும் தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் குணா படத்தின் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி, குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து பதிலளிக்க பிரமீடு, எவர்கிரீன் மீடியா நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது பிரமீடு, எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல், குணா படத்தின் பதிப்புரிமை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் கன்ஷியாம் ஹேம்தேவ் இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய இப்போது தடை கோர முடியாது என வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குணா படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து குணா படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.





