நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன் தொடர்ந்து பகீரத முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டு வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி சென்சாருக்கு ஜனநாயகன் படம் அனுப்பப்பட்ட நிலையில் அதில் சில திருத்தங்கள் செய்யுமாறு சென்சார் போர்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர். குறிப்பிட்ட அந்த திருத்தங்களை செய்த பிறகு சென்சார் போர்டு கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதியே படத்துக்கு சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்காமல் 10 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தியது.
இதுகுறித்து சென்சார் போர்டை அணுகிய தயாரிப்பு நிறுவனத்திற்கு சரியான ரெஸ்பான்ஸ் தராதால் பட நிறுவனம் குழம்பிப் போனது. ஏனெனில் படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படக்குழுவினர் பலத்த அதிர்ச்சியடைந்தனர். மேலும் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் இதனால் பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் வேறு வழியின்றி ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டுக்கு சென்றது. இந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா கடந்த 9ம் தேதி சான்றிதழ் உடனடியாக வழங்கி ஜனநாயகன் படத்தை வெளியிட சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவரது உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் வருகிற 24ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
இதைத்தொடர்ந்து கேபிஎன் புரொடக்சன் பட நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து நேற்று மேல்முறையீடு செய்தது. எப்படியாவது ஜனநாயகன் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் இப்போது அதற்கும் சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நேற்று தணிக்கை வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகன் படம் தொடர்பாக சென்சார் போர்டு தரப்பினரிடம் விளக்கம் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்துக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகி வருகிறது. சென்சார் போர்டு ஜனநாயகன் படத்தை வெளிவராமல் தடுப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வமும் வேகமும் காட்டுகிறது என்று விஜய் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் இருந்து வருகின்றனர்.





