ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கியுள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ஜினிகாந்த் நடித்திருக்கிறார். கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன், முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் ரோகிணி, அபிராமி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வேட்டையன் படம் அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. முதல் நாளன்று வேட்டையன் படம் பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது அதிர்ச்சியை தெரிவித்தனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், இதுபோன்ற படங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தாலும் கூட ரசிகர்களை கவர வாய்ப்பில்லை என்றும் விமர்சனம் இருந்தது.
இது ரஜினி படமாக இல்லாமல், தசெ ஞானவேல் படமாகவும் இல்லாமல் இடைவேளைக்கு பிறகு வேறு மாதிரியான கோணத்தில் செல்வதால் படத்தின் போக்கு பிடிபடவில்லை என்றும் பலர் கருத்து கூறியிருந்தனர். முதல் நாளன்று தமிழ்நாட்டில் 17 கோடி, உலக அளவில் 60 கோடி ரூபாயும் வேட்டையன் படம் வசூலித்திருந்தது. 2வது நாளான நேற்று உலகளவில் 36 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
படத்துக்கு கலவையான விமர்சனங்களை கிடைத்து வருவதால் பெரிய அளவில் வசூலில் இனி சாதிக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.இதற்கிடையே ஜெயிலர் படம் வெளியான போது 2 வாரங்களுக்கு முன்பிருந்தே படம் குறித்த பிரமோ நிகழ்ச்சிகளில் படத்தின் டைரக்டர், படத்தில் நடித்தவர்கள், இசையமைப்பாளர் அனிருத் அதிக கவனம் செலுத்தி படத்தை மக்களிடம் கொண்டு சென்றனர். ஆனால் வேட்டையன் படத்தை பொறுத்தவரை படத்தில் நடித்த யாருமே பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று படத்துக்கு விளம்பரத்தை செய்யவில்லை.
குறிப்பாக படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல், வேட்டையன் படம் குறித்த முக்கியமான விஷயங்களை கிளிப்பிங் செய்து, பிரமோவாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சேர்த்திருக்க வேண்டும்.அவர் அந்த விஷயத்தில் எந்த விதமான அக்கறையும் காட்டவில்லை. இதற்கு காரணம் அக்டோபர் 10ம் தேதி கங்குவா படம்தான் ரிலீஸ் ஆகும். வேட்டையன் ரிலீஸ் எப்படியும் தள்ளிப் போகும் என்ற எண்ணத்தில் அவர் இருந்ததால் படத்தின் பிரமோ விஷயங்களில் அவர் போதிய கவனமும் அக்கறையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.





