தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்களில் ஒருவர் கருப்பு சுப்பையா. கவுண்டமணி – செந்தில் கூட்டணியில் நிறைய படங்களில் அவர் இணைந்து நடித்திருக்கிறார். மிகச் சிறிய வேடங்களில் தோன்றினாலும் தன்னுடைய தனித்துவமான முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நெத்தியடி பூவாத்தா பெரிய மருது கட்டபொம்மன் தங்கமான ராசா உள்ளிட்ட பல படங்களில் கருப்பு சுப்பையா நடித்திருக்கிறார். குறிப்பாக, கவுண்டமணி அவரை ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ என்று கிண்டல் செய்யும் காமெடி காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த நேரத்தில் அவர் நடித்த பல காட்சிகள் டிவி சேனல்களில் பலமுறை ஒளிபரப்பாகி, அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கின.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரிய மருது படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சி பிறகு வருத்தமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த காமெடி காட்சியில் கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழிலாளர்களாக நடித்திருப்பார்கள். அவர்களிடம் பேசும் கருப்பு சுப்பையா அடமானம் வைத்த தன்னிடம் இல்லாத ஒரு அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என்று கேட்டு கடுப்பாக்கி விடுவார்.
இதனால் கோபமடையும் கவுண்டமணியும் செந்திலும் அவருடைய உடலிலேயே ஈயம் பூசுவது போல அந்த காட்சி இருந்தது. அந்த காட்சிக்காக அவருடைய உடலில் அதிகளவிலான பெயிண்ட் மற்றும் இரசாயனப் பொருட்கள் பூசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல ஆண்டுகளுக்கு பிறகு பேசிய நடிகர் படத்தின் இயக்குனர் மனோபாலா கூறுகையில், அந்த படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட இரசாயனக் கலவைகள் கருப்பு சுப்பையாவின் உடல் நலத்தை மோசமாக பாதித்ததாக கூறியிருந்தார்.
உடலுக்குள் இரசாயன பாதிப்பு ஏற்பட்டதால் அவர் நீண்ட நாட்கள் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்த காரணத்தால் பல நடிகர்கள் ஆபத்தான காட்சிகளிலும் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நடித்திருக்கின்றனர். திரையில் சிரிப்பை விதைத்த கருப்பு சுப்பையாவின் நிஜ வாழ்க்கை முடிவில் சோகமாக முடிந்தது.
வயது அதிகமானதால் படவாய்ப்புகள் குறைந்தன. அதைத் தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதால் பொருளாதார கஷ்டங்களும் அவரை வாட்டியது. அவரை கவனிப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் நீண்டகால நோயால் அவதிப்பட்டு அவர் 2013ம் ஆண்டில் கருப்பு சுப்பையா இறந்தார். ஆனால் இன்றும் இணையத்தில் அவருடைய காமெடி காட்சிகள் ஷேர் செய்யப்படுவதால் அவர் ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் கருதப்படுகிறது.





