தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய படங்களை இயக்கிய அவர் இப்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து கைதி 2 படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இவரது படங்கள் எல்லாமே கேங்ஸ்டர் கதையில் உருவான யுனிவர்ஸ் படங்களாக தான் இருந்து வருகின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் இயக்கும் படங்களில் எல்சியு எனப்படும் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ்சை உருவாக்கி உள்ளார். அதாவது அந்த யுனிவர்ஸ்சில் உள்ள படங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதாகவும் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மற்றப் படத்திலும் தொடர்வதாகவும் காட்டப்படுகிறது.
கைதி விக்ரம் படங்களை அந்த முறையில் அவர் இயக்கி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கைதி 2 விக்ரம் 2 படங்களை எடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதாவது ஒரு படத்தின் தொடர்ச்சியாக சில கேரக்டர்கள் அடுத்த படங்களிலும் அதே கேரக்டரில் வருவதுதான் எல்சியு என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளிவந்த படம் ஆயுத எழுத்து. இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா சித்தார்த் மாதவன் ஆகியோர் 3 ஹீரோக்களாக நடித்திருந்தனர். இந்த படம் 3 விதமான கதைகளில் உருவாகி இருந்தது. ஆயுத எழுத்து படத்தில் நடித்த 3 ஹீரோக்களுக்கும் வெவ்வேறு கதைகளை உருவாக்கி கடைசியில் ஒரே புள்ளியில் சந்திப்பது போல இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் மணிரத்னம்.
இந்த 3 கதைகளையும் தனித்தனியாக எடுத்து ஒரு யுனிவர்ஸ்சாக உருவாக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு மணிரத்னம் கூறியதாவது, ஆயுத எழுத்து படத்தில் வரும் கதைகளை தனித்தனியாக பிரித்து 3 படங்களாக எடுக்கலாம் அந்த அளவுக்கு அதில் கதைகள் இருக்கிறது. இதை தனித்தனியாக எடுத்து ஒரு யுனிவர்ஸ்சாக மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.
ஒரு படம் எடுக்கவே கடினமாக இருக்கிறது. இதில் யுனிவர்ஸ் படங்களை எப்படி எடுப்பது? அதற்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் சரியான ஆள் என்று இயக்குனர் மணிரத்தினம் கூறியிருக்கிறார். ஜாம்பவானாக கருதப்படும் இயக்குனர் மணிரத்னம் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜை இப்படி பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.





