தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளர்கள் இப்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை ஹீரோக்களின் சம்பளம்தான். தமிழ் தெலுங்கு என நட்சத்திர ஹீரோக்கள் பலரும் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். இதனால் 400 கோடி 500 கோடி ரூபாய் என முதலீடு போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பலத்த இழப்பை சந்திக்கின்றனர்.
ஏனென்றால் இதில் பெரும்பாலான நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடுவதில்லை. இப்படி தொடர் நஷ்டத்தை சந்திக்கும் பெரிய தயாரிப்பாளர்கள் கூட ஒரு கட்டத்தில் கடனாளியாக மாறிவிடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, ஹீரோக்களுக்கு லாபத்தில் பங்கு என்ற சம்பள முறைக்கு தயாரிப்பாளர்கள் மாறி வருகின்றனர்.
இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ராம்சரண் ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பெத்தி. வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு தற்போது தெலுங்கானா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மூலம் புதிய சிக்கல் வந்துள்ளது.
தெலுங்கானா சிங்கிள் தியேட்டர்களில் இந்தப் படத்தை சதவீத பங்கு அடிப்படையில் மட்டுமே வெளியிடுவோம் என நேற்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தெலுங்கானா அரசுக்கு இந்த படத்திற்கான சிறப்பு கட்டண உயர்வை தரக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் இடையே இந்த சதவீத பங்கு விவாகரத்தில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை சொல்வதற்கு முன்பாகவே இப்படி ஒரு முக்கிய முடிவை தியேட்டர் சங்கத்தினர் தானாகவே எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் எப்படி தீர்க்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் அறிவித்தபடி ஜூன் 4ம் தேதியில் பெத்தி படம் ரிலீஸ் ஆகுமா என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.





