கேவிஎன் புரடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் மமீதா பைஜூ நடித்திருக்கிறார்.
மேலும் நடிகை பிரியாமணி பாபி தியோல் கௌதம் மேனன் நரேன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஜனநாயகன் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜனநாயகன் படத்திற்கான அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் கடந்த மாதமே முடிவடைந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி தணிக்கை சான்றுக்காக படக்குழு இந்த படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் கடும் விரக்தியில் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் நீதிபதியிடம் முறைப்பீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் இன்று மதியம் 2:30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதியிடம் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படத்தை தணிக்கைக்கு அனுப்பினோம். படத்தில் வரும் 3 காட்சிகளை மட்டும் நீக்குமாறு கூறினார்கள். குறிப்பிட்ட அந்த 3 காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் தணிக்கைக்கு அனுப்பினால் மறுஆய்வுக் குழுவிடம் செல்லுமாறு கூறுகிறார்கள். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டது.
சென்சார்போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சுந்தரேசன் கூறுகையில், படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டு அதன்பிறகு தணிக்கை சான்றிதழ் விண்ணப்பித்து உடனடியாக தணிக்கை செய்து தருமாறு கேட்கிறார்கள். அது எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பினார். உடனே நீதிபதி பிடி ஆஷா, ஏன் நீங்கள் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பினீர்கள்? அதற்கான ஆவணங்களை நீங்கள் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு அதிரடி உத்தரவிட்டார். அதன்படி ஜனநாயகன் படத்தின் வழக்கு நாளை மதியம் 2 15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.





