தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், சினிமா துறை சார்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களது துறை சார்ந்த முக்கிய கோரிக்கை மனுக்களையும் முதல்வரிடம் நேரில் அளிக்கின்றனர்.
திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து மன்னர் அலங்காரத்தில் அவர் இருக்கும் பகைப்படம் ஒன்றை பரிசளித்து அவருடன் மனம் விட்டு பல நிமிடங்கள் பேசியிருக்கிறார். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் பல விஷங்களை அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் கூறியதாவது, கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கசாயம் கொடுத்து விட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சி அமைத்து ஏஎம் முதல் பிஎம் வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு சிஎம். சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகரிய விமானத்தில் பல ஆண்டுகள் பயணித்தவர்.
சட்டென மாறிய வானிலை போல சிஎம் நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவில் இருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்லப் பிரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களை.
புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில், கை போட்டுக்கலாமா? என்றார் பணிவாக. சார் என்ன சார் நான் இல்லே உங்ககிட்ட கேக்கணும் என்று. போடுங்க என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய போட்டோவை பார்த்து இப்படி ஏதாவது வரும் என எதிர்பார்த்தேன் என்றார்.
நான் எழுதியதை வாசித்துக் காட்டினேன். யோசித்து சிரித்தார். தனிமையில் 15 நிமிடங்கள் பேசினார். அதில் முதல் 5 நிமிடங்கள் நான் மனம் விட்டு ஒரு எமோஷனல் பாண்டிங்குடன் பேச மெதுவாய் அவரும் ஆத்மார்த்தமான உணர்வுடன் உட்புகுந்தார். என் குழந்தைகள் பார்த்திபன் மனிதநேய மன்றம் அரசியல் இப்படி பல திசை பேச்சோடு ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையாக பேச்சுத்தொடர்ந்தது என்று இயக்குனர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.





