கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். தமிழில் புலி நான் ஈ பாகுபலி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றவர். கடந்தாண்டில் மேக்ஸ் என்ற இவரது படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தாணு தயாரித்திருந்தார்.
அதே போல் இந்த ஆண்டும் கிச்சா சுதீப் நடித்த மார்க் என்ற படம், கடந்த 25ம் தேதி கன்னட மொழியில் ரிலீஸாகி விட்டது. ஆனால் தமிழில் இந்த படம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிச்சா சுதீப் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நடிகர் கிச்சா சுதீப் சமீபகாலமாக அவர் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறிப்பாக பான் இந்தியா படங்களுக்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது இல்லை. அதற்கு பதிலாக கன்னட மொழியில் அந்த படத்தை வெளியிடும் முழு உரிமையை தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்.
கடந்த ஆண்டில் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் அவர் நடித்த மேக்ஸ் படம் கன்னடத்தில் வெளியாகி பெரிய லாபத்தை நடிகர் கிச்சா சுதீப்புக்கு கொடுத்தது. ஆனால் அந்த படம் தமிழில் சரியாக போகவில்லை. அதனால் தயாரிப்பாளர் தாணுவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தாணுவுக்கு பலத்த நஷ்டம், படத்தின் கன்னட உரிமம் வாங்கிய நடிகர் சுதீப்புக்கு இதில் நல்ல லாபமும் கிடைத்தது.
இப்போது மார்க் படத்திலும் அதே பார்மூலாவை நடிகர் கிச்சா சுதீப் பின்பற்றி உள்ளார். அதாவது மார்க் படம் கடந்த 25ம் தேதி கன்னட மொழியில் வெளியாகி பலத்த லாபத்தை கிச்சா சுதீப்புக்கு தந்து வருகிறது. ஆனால் தமிழில் அந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால்தான், படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும்.
ஒருவேளை கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்ற மார்க் படம் தமிழில் சரியாக போகவில்லை என்றால், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், மேக்ஸ் படத்தில் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் தாணுவின் நிலைக்குதான் வர வேண்டும். இப்படி தயாரிப்பாளர்களை முதலீடு போட்டு தனது படங்களை தயாரிக்க வைத்து. அந்த படங்களை கன்னட மொழியில் வெளியிட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார் நடிகர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.





