நடிகர் அஜீத்குமார் இப்போது நடித்து வரும் படங்கள் விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி. துணிவு படத்துக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும் அஜீத்குமாரின் அடுத்த படம் வெளிவரவில்லை. ஆனால் விடாமுயற்சி படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய சூழலில், இன்னும் படப்பிடிப்பே முடிவடையாமல் நீடிக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே ஒரு ஷெட்யூல் நடித்து முடித்துவிட்ட நடிகர் அஜீத்குமார், இப்போது மீண்டும் 40 நாட்கள் கால்ஷீட், விடாமுயற்சி படத்துக்காக கொடுத்திருக்கிறார். கடந்த ஜனவரிக்கு பிறகு விடாமுயற்சி ஷூட்டிங் நடக்காத நிலையில், இப்போதுதான் கடந்த 20ம் தேதி முதல் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
அஜர்பைஜானில் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட அஜீத்குமார், மனைவி ஷாலினிக்கு முக்கிய அறுவை சிகிச்சை சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், இப்போது சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் வருகிற 8ம் தேதி அவர் அஜர்பைஜானுக்கு சென்று தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.
ஏற்கனவே இந்தியன் 2, இந்தியன் 3, லால் சலாம், வேட்டையன், விடாமுயற்சி, கேம் சேஞ்சர் என பல படங்களை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம், பல விதங்களில் நிதி நெருக்கடியும், பலத்த நஷ்டங்களையும் படங்கள் தயாரிப்பில் சந்தித்ததால் தயாரித்து வரும் படங்களை மட்டும் முடித்துவிட்டு, இனி படங்கள் தயாரிப்பு இல்லை என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துள்ளது.
இந்த சூழலில் அஜர்பைஜானில் நடந்துவரும் ஷூட்டிங்கில் செலவு, எக்குத்தப்பாக தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. தினமும் போட்ட பட்ஜெட்டை விட ஏகப்பட்ட செலவுகள் நீடிப்பதால், அஜீத், திரிஷாவின் பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகளை எடுத்துவிட்டு அங்கிருந்து வரும் 28ம் தேதிக்குள் கிளம்பிவிட முடிவு செய்துள்ளது. ஏனெனில் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பை நடத்துவது செலவுகளை இன்னும் பன்மடங்கு எகிறச் செய்துவிடும்.
அதன்பிறகு அஜீத்குமார் பங்கேற்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவடைகிறது. ஏற்கனவே இந்த சண்டைக் காட்சியை அஜர்பைஜானில் வேண்டாம், சென்னையில் எடுத்துக்கொள்ளலாம் என்று அஜீத்குமார் கூறியிருந்தார். இப்போது அஜீத்குமார் சொன்னது போல, சென்னையில் இல்லை என்றாலும் ஐதராபாத்தில் எடுக்க லைகா புரடக்சன்ஸ் முடிவு செய்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.





