நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் தி கோட் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் நடித்துள்ள விஜய், இந்த படத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் அதாவது தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். இது அரசியல் படமாக இருக்காது, கமர்ஷியல் படம்தான். அதனால் அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும் என்றும் கூறிவிட்டார்.
இந்த படத்துக்கு பிறகு வாழை பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது திட்டமிட்டே பரப்பப்பட்ட வதந்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பது கடைசி படம்தான் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தி கோட் படம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்னும் விஜய், திரிஷா குத்தாட்டம் போட்ட பாடல் வெளியிடப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் அந்த பாடலை வெங்கட்பிரபு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டில் வெளிவந்த லியோ படத்துக்கு அதிகாலை 4 மணிக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அதே போல் ஜெயிலர், தங்கலான், லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் என எந்த படங்களுக்குமே அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. படம் ரிலீஸ் அன்று முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என்பது தமிழக அரசின் திட்டவட்டமான முடிவாக உள்ளது.
ஆனால் அருகில் உள்ள கேரளாவில், அதிகாலை 4 மணி காட்சிக்கு கேரள அரசு அனுமதி தந்துள்ளது. அதனால் வருகிற செப்டம்பர் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியும், அடுத்து 7 மணிக்கு 2ம் காட்சியும் தி கோட் படம் திரையிடப்படுகிறது. அதே போல் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தி கோட் திரையிடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் முதல் காட்சி தி கோட் காலை 9 மணிக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிகாலை 4 மணி காட்சியை காணும் உற்சாகத்தில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் உள்ளனர்.





