ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படக்குழு சுருக்கமாக தி கோட் என அழைக்க, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இதில் நடித்திருக்கிறார். இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகா வருகிறார். சினேகாவின் தம்பியாக பிரேம்ஜி அமரன் நடித்திருக்கிறார். மோகன் படத்தின் வில்லனாக வருகிறாராம். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும், கோட் நன்றாக இருப்பதாகவே கூறுகின்றனர்.
அதே சமயம், மற்றொரு பக்கம் படத்தை பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். முதலில், படத்தில் நிறைகள் என்ன எடுத்துக் கொண்டால் முதல் பாதி நன்றாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மகன் விஜய் கதாபாத்திரம் சரியான அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த டி ஏஜிங் முறை நன்றாக உள்ளது என்றும் விமர்சனங்கள் வருகின்றன.
குறிப்பாக படத்தில் விஜயின் அறிமுகம், இடைவேளை காட்சி, மட்ட பாடல் இடம் பெற்ற இடம், அதில் திரிசாவின் ஆட்டம், கிளைமாக்ஸ் இன் கடைசி 40 நிமிடங்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக உள்ளது என்றும், அதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கேமியோ கதாபாத்திரங்கள் வருவதும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுவதாக வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்கள்.
அதேசமயம் இந்த திரைப்படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. மிக முக்கியமாக இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக படம் மிகவும் மெதுவாக நகர்வதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பாங்காங் காட்சிகள் படத்தில் ஏன் இடம்பெற்றது என்றே தெரியவில்லை என்று கேள்விகள் எழுதுகிறார்கள்.
ஸ்பார்க் பாடலும் படத்தில் நன்றாக இல்லை என்று கூறும் ரசிகர்கள், மோகன் படத்தின் வில்லனுக்கான கதாபாத்திரத்தில் செட்டாகவே இல்லை என்று கூறுகின்றனர். வில்லன் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படாததாலும், வி எஃப் எக்ஸ் காட்சிகள் அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்காது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு திரையரங்குகளுக்கு பலர் திரண்டு வருவதால் நிச்சயம் இந்த திரைப்படம் 500 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





