நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் வணிகரீதியான வெற்றிப் படம் என்று கூறப்பட்டது. இந்த படம் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 4வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த படம் தேரே இஸ்க் மெய்ன். இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய வெற்றிப் படமாக இருந்தது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்துக்கு கர என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமரன் படத்துக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்த படத்துக்கு டி 55 என தற்காலிகமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் சொந்தமாக தயாரிக்கிறது.
டி 55 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். மேலும் டி55 படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டது. இந்த சூழலில் அதுகுறித்த முக்கிய தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து படக்குழு சார்பில் அறிவிப்பு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டதால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இன்னும் சில வாரங்களில் டி 55 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்கிடையே டி 55 படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் பூஜா ஹெக்டே, சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.
இந்த 2 நாயகிகளில் ஒருவர் ஓகே சொல்லும் பட்சத்தில் நடிகர் தனுஷூக்கு சாய் பல்லவி அல்லது பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மாலை 6 மணிக்கு வெளியான அறிவிப்பில் டி 55 படத்தில் நாயகியாக நடிப்பது நடிகை ஸ்ரீலீலா என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஸ்ரீலீலா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





