நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸாகிறது. லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் ராணா டகுபதி, கல்வி நிறுவனங்கள் நடத்தும் பெரிய தொழிலதிபராக நடித்திருக்கிறார். படத்தின் வில்லனாகவும் இருக்கிறார். மேலும் மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, அபிராமி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். லால் சலாம் படத்தை தொடர்ந்து, ரஜினி நடித்த வேட்டையன் படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் என்கவுண்டர் ஆபீஸராக நடித்திருக்கிறார். என்கவுண்டர் தவறா, சரியா என்ற கோணத்தில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் காட்சிகளிலும் இதுகுறித்து வசனங்களும் காட்சிகளுமே இடம்பெற்றுள்ள நிலையில், என்கவுண்டர் குறித்து இந்த படம் உரக்கப் பேசும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் வேட்டையன் படம் ஆரம்பத்தில் இருந்தே கல்வித்துறை சம்பந்தமான படம் என்றும், இந்த படத்தில் கல்வித்துறையில் நடக்கும் பிரச்னைகள், மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துதான் இயக்குனர் தசெ ஞானவேல் பேச இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தில் என்கவுண்டர் சார்ந்த பிரச்னைகளே பேசப்படுவதாகவும் தெரிகிறது.
இதுகுறித்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், வேட்டையன் படத்தில் இயக்குனர் தசெ ஞானவேல், என்கவுண்டர் பிரச்னை குறித்தும், கல்வித்துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் பேசுவதாக தெரிய வந்துள்ளது. ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல என்கவுண்டர் மற்றும் கல்வித்துறை என 2 விஷயங்களையுமே பேசியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் வில்லன் ராணா டகுபதி, கல்வி நிறுவனங்கள் சார்ந்த எஜூகேஷனல் மாபியாவாக செயல்படுகிறார். துஷாரா விஜயன் ஆசிரியையாக பணிபுரிகிறார். அதில் கல்வித்துறை சார்ந்த பல பிரச்னைகளை துஷாரா விஜயன் கேரக்டர் வாயிலாக தசெ ஞானவேல் வெளிப்படுத்தி இருக்கிறார். ராயன் படம் போல, இந்த படமும் துஷாரா விஜயன் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்றும் தெரிய வந்துள்ளது.





