நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா என நட்சத்திர பட்டாளமே இருந்தும் கதை சொதப்பியதால் இந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் வணிக ரீதியாக லாபம் தந்த படமாக இருந்தது.
கூலி படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்தார். இந்த படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படம் போலவே ஜெயிலர் 2 படமும் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும், குறிப்பாக ரூ. 1000 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல் தயாரிக்கும் தர்மன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டராக நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் 2 ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து 3வது ஷெட்யூல் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இதில் ராஷி கண்ணா சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தர்மன் படம் வருகிற பொங்கலுக்கு அதாவது 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என்று தகவல் கசிந்துள்ளது. அதனால் இந்த முறை தலைவர் பொங்கல்தான் என்று ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் சில போட்டோஷூட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
அதே போல் வருகிற பொங்கலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் நடித்துள்ள ராஜன் வகையறா படம் ரிலீஸ் என்று தெரிய வந்துள்ளது. அதே போல் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்துள்ள புருஷன் படமும் பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகி உள்ளது. எனவே ரஜினியுடன் இந்த 2 படங்களும் மோதுகின்றன.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படமும் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும் அந்த படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் என்பதால் தர்மன் படத்துடன் அந்த படம் மோத வாய்ப்பில்லை. சேயோன் படம் ஸம்மர் சீசன் ரிலீஸ் ஆக அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் என்றும் ஒரு உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.





