தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர்களில் நடிகர் சூரியும் ஒருவர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடித்தார். அந்த படம் அவருக்கு தனித்த ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
விடுதலை படத்தில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தை முற்றிலும் இழந்து ஒரு நல்ல நடிகராக அந்த படத்தில் தனது நடிப்பை சூரி வெளிப்படுத்தினார். அதன் பிறகு சூரி ஹீரோவாக நடித்து 2024ம் ஆண்டில் கருடன் கொட்டுக்காளி விடுதலை 2 ஆகிய படங்கள் வெளியாகின. இதில் கருடன் படத்தில் நடிகர் சசிகுமார் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் கொட்டுக்காளி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படமும் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டில் வெளியான மாமன் படம் சூரிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது இந்த படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூலித்து இலாபத்தை தந்த படமாகவும் சூரிக்கு அமைந்தது.
மாமன் படத்தை தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக மண்டாடி என்ற படத்தில் நடிகர் சூரி நடித்து வந்தார். கடலும் கடல் சார்ந்த இடத்தின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மண்டாடி படத்தில் சுகாஷ் மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மண்டாடி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் மண்டாடி படத்துக்கு தெலுங்கு இயக்குனர்கள் தெலுங்கு பட நடிகர்கள் ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இந்த படத்தை வெளியிடுகின்றன. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரிக்கு மண்டாடி படமும் பெரிய வெற்றியை தந்தால் அவரது வியாபாரம் எல்லை இன்னும் விரிவடையும். மேலும் அவரது சம்பளமும் கணிசமாக உயரும். கமர்சியல் ஹீரோக்களில் ஒருவராக சூரிக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளும் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





