தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கல்லூரியில் படித்த காலத்தில் குறும்படங்களை இயக்கிய அவர் அந்த அனுபவங்களை மட்டுமே வைத்து, எந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி செய்யாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கியவர். மாநகரம் என்ற முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பை பெற்றவர்.
மாநகரம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கார்த்தி நடித்த கைதி படமும் பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது. அதே போல் கமல் நடித்த விக்ரம் படமும் மாபெரும் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து மாஸ்டர் லியோ படங்களை இயக்கிய அவர் இப்போது ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் என புது காம்போவில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் கன்னட நடிகர் உபேந்திரா இந்தி நடிகர் அமீர்கான் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சவுபின் சாகிர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் கடந்த 2 வாரங்களாக நடந்து வரும் ஷூட்டிங்கில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் சிவராஜ்குமார் மோகன்லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கூலி படத்தின் பிரமோசன் பணிகளில் கலந்து கொள்ள உள்ளதால் தற்காலிகமாக நான் சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகுகிறேன், என அவர் அதில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் நடித்த லியோ படம் வெளியாகும் நேரத்திலும் இதே போன்ற அறிவிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதே போல் விக்ரம் படம் ரிலீஸின் போதும் இதே பதிவை அவர் செய்திருந்தார். தனது இயக்கத்தில் உருவான படம் ரிலீஸ், பிரமோசன் காலகட்டத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பது ஏன் என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.





