இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பான் இந்தியா ஸ்டார் நடிகராக பிரபாஸ் இருந்து வருகிறார். பாகுபலி படங்களில் நடித்த பிறகு அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்று விட்டது. கல்கி 2898 சலார் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்த பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே அது பிரமாண்ட பட்ஜெட் படங்களாக மாறி வருகின்றன.
அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் தி ராஜா சாப் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் மாருதி இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. திகில் திரில்லர் காட்சிகள் நிறைந்த பேய் படமான தி ராஜா சார் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
பொதுவாக திகில் காட்சிகள் நிறைந்த பேய் படங்கள் என்றாலே பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்படுவது தான் வழக்கம். அப்போதுதான் பேய் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக வரும். ராஜாவாக இருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் பேய் பங்களாவில் ஹீரோ பிரபாஸ் என்ன செய்கிறார், பதிலுக்கு பேய் என்ன செய்கிறது என்ற ரீதியில் இந்த படத்தின் கதைக்களம் இருந்து வருகிறது.
இதற்காக ஐதராபாத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. இங்கு உள்ள 45 ஆயிரம் சதுர அடியில், 42 ஆயிரம் சதுர அடியில் அரண்மனை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரபாஸ் மற்றும் ஹீரோயின்கள், பேய் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு 150 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிடப்பட்டு, இதுவரை 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் இதுதான் என்றும் கூறப்படுகிறது. காக்க காக்க சிறுத்தை பையா உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணி செய்த ராஜீவன் இந்த செட்டை உருவாக்கி இருக்கிறார்.
இந்த செட்டை உருவாக்க 1000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இணைந்து கடந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் இந்த பணிசெய்து இந்த பிரமாண்ட அரண்மனை செட்டை உருவாக்கி இருக்கிறார்கள். வடக்குப்பட்டி ராமசாமி என்ற தமிழ் படத்தை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம்தான் தி ராஜா சாப் படத்தை தயாரிக்கிறது. நிதி அகர்வால் மாளவிகா மோகனன் ரித்திகுமார் இந்த படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இது முதன்முறையாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் திகில் பேய் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





