விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வந்தாலும் இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் 52 நாட்கள் நடைபெற்றது. கடுமையான பனியிலும் படக்குழுவினர் மிக தீவிரமாக உழைத்தனர். அவர்களின் தீவிரமான உழைப்பை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் “லியோ” படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவை பார்த்த பலரும் “லியோ” படக்குழுவினர் பட்ட கஷடங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் எஸ் லலித்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் பேசிய அவர் காஷ்மீரில் விஜய் செய்த நெகிழ்ச்சி காரியம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“காஷ்மீரில் 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே மைனஸ் 22 டிகிரி குளிர் இருந்தது. நாங்கள் எல்லாம் இரண்டு மூன்று ஸ்வெட்டர்கள் போட்டிருந்தோம். ஆனால் விஜய் வெறும் ஒரு சட்டையை அணிந்துகொண்டுதான் நடித்தார்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “விஜய் ஒரு நாள் என்னிடம் ‘படக்குழுவினர் எல்லாம் காலை எத்தனை மணிக்கு வருகிறார்கள்?’ என கேட்டார். நான் ‘காலை 3 மணிக்கே வந்துவிடுவார்கள், 3 மணிக்கு வந்தால்தான் சமையல் செய்பவர்கள் பாத்திரத்தை கழுவி முடித்து சமையல் செய்ய சரியாக இருக்கும். அதுவும் பாத்திரங்கள் எல்லாம் ஐஸ் கட்டியாக இருக்கும். அந்த ஐஸ் கட்டியை உருக்கிய பிறகுதான் கழுவ முடியும்’ என ஊழியர்களின் கஷ்டங்களை குறித்து கூறினேன்.

அதனை கேட்டுக்கொண்டிருந்த விஜய், ‘இவர்களுக்காக எதாவது செய்யனும்’ என கூறினார். அதற்கு நான் ‘என்ன செய்யலாம்?’ என கேட்டேன். அதற்கு விஜய், ‘இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று அவரவர்களின் குடும்பங்களுக்கு தெரியாது. லைட் மேனில் இருந்து அனைவரும் காலை 3 மணியில் இருந்து வேலை செய்கிறார்கள். இவர்களின் குடும்பங்களுக்கு தெரியும் வகையில் எதாவது செய்ய வேண்டும்’ என கூறினார். அதற்கு நான், ‘அப்படி என்றால் இவர்களின் டெடிகேஷனை வீடியோவாக செய்யலாம்’ என்று கூறினேன். அதற்கு விஜய்யும் ஒப்புக்கொண்டார். அவ்வாறு உருவானதுதான் அந்த Tribute வீடியோ. அந்த வீடியோ உருவானதற்கு முழுமுதல் காரணம் விஜய்தான்” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார் லலித்குமார்.





