கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் 1, அஜீத்குமார் நடித்த வலிமை, துணிவு ஆகிய வெற்றிப் படங்களை தந்தவர் எச். வினோத். கடந்த 2023ம் ஆண்டில் வெளிவந்த துணிவு படத்துக்கு பிறகு, அடுத்த பொங்கல் பண்டிகையும் வந்துவிட்டது. இதுவரை அவர் எந்த படப்பிடிப்பையும் அவர் துவங்கவில்லை.
இதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசன். துணிவு படத்துக்கு பிறகு, நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கமல் சொன்ன வாக்குறுதியை நம்பி எச். வினோத் காத்திருந்தார். இந்தியன் 2, இந்தியன் 3 படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருப்பதால், அதற்கு பின் பண்ணலாம் என சில மாதங்கள் காத்திருக்க சொன்னார்.
அது 3 மாதங்கள், 6 மாதங்கள் என கால அவகாசம் நீடித்தது. இதற்கிடையே பிக்பாஸ் வந்துவிட்டதால் அந்த பணிகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னவர், அதற்கும் 3 மாதங்கள் வரை தாமதம் செய்தார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தை ஒத்துக்கொண்ட கமல், எச். வினோத் படத்தின் படப்பிடிப்பிலும், மணிரத்னம் படப்பிடிப்பிலும் மாறி மாறி நடிப்பதாக கூறினார்.
இதையும் நம்பிக்கொண்டு எச் வினோத், கமல் தரும் கால்ஷீட்டுக்காக காத்திருந்தார். இதற்கிடையே கமலிடம் எச். வினோத் கதை சொல்வதும், அதில் கமல் கரெக்சன் சொல்வதும் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. துணிவு படத்துக்கு பிறகு ஓராண்டு காலம் காத்திருந்த நிலையில், ஒரே முடிவாக இப்போதைக்கு உங்கள் படத்தில் நடிக்க முடியாது என கமல் ஓப்பனாகவே நோ சொல்லி விட்டார்.
இதையடுத்து கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் 2 படத்தை எச். வினோத் இயக்குவதாக கூறப்பபட்டது. ஆனால் அந்த படத்தை இயக்கவில்லை. அதன்பிறகு யோகி பாபு நடிக்கும் அரசியல் நையாண்டி கலந்த காமெடி படத்தை எச். வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. அதுவும் இல்லை.
இப்போது எச். வினோத் தனுஷ் நடிக்கும் படத்தை தான் இயக்குகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. எஸ்எஸ் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கிடையே எச். வினோத்துக்கு கமல் நோ சொல்ல முக்கிய காரணம், தக்லைப் படத்திலும், எச். வினோத்திலும் கமல் வேறு வேறு கெட்டப்பில் வர வேண்டுமாம். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும் அப்படி நடிக்க முடியாது என்பதால்தான், கமல் எச் வினோத்துக்கு நோ சொல்லி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.





