தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. மூத்த நடிகர் சிவகுமாரின் இளைய மகன். நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களை கடந்து ஒரு நல்ல நடிகராக இவரை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் அமீர். இந்த படத்தில் நடித்த கார்த்தியை, ரசிகர்கள் கொண்டாடினர்.
கடந்த 2007ம் ஆண்டில் வெளியான பருத்திவீரன் என்ற படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் கார்த்தி தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக கைதி, சர்தார், தீரன் அதிகாரம் 1, அழகு ராஜா, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், கொம்பன், தோழா, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
கடந்தாண்டில் கார்த்தி அவரது 25 வது படம் ஜப்பான் படத்தில் நடித்தார். ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கினார். இதுவரை கார்த்தி நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களுக்கு மத்தியில் அவரது 25வது படம் ஜப்பான் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. இந்தியன் 2 படத்தை விட ரசிகர்களை கதற விட்ட பெருமை இந்த படத்துக்கு உண்டு.
எனினும் தற்போது 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள மெய்யழகன் படம் கார்த்திக்கு ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.
மெய்யழகன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான வா வாத்தியார் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பும் ஒரே காலகட்டத்தில் நடந்த நிலையில், மெய்யழகன் படம் ரீலீஸைத் தொடர்ந்து வா வாத்தியார் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
வா வாத்தியார் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தை வருகிற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாரமான 26 அல்லது 27ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





