மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் மிகவும் ஜாலியான பொழுதுபோக்கான ஒரு காதல் படமாக இருந்த படம் அன்பே வா. இந்த படத்தில் வழக்கமான எம்ஜிஆராக இல்லாமல் ஜாலியான ஒரு எம்ஜிஆராக ஜேபி என்ற தொழிலதிபர் கேரக்டரில் எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருப்பார். படம் முழுவதும் சிம்லாவில் நடப்பது போல் திரைக்கதை அமைந்திருக்கும்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த 1966ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்த படத்தில் எம்ஜிஆருடன் சரோஜா தேவி நாகேஷ் மனோரமா அசோகன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பெரிய கோடீஸ்வரர் எம்ஜிஆர் பங்களாவில் சரோஜா தேவி தங்கியிருப்பார். அவரிடம் ஏழையாக நடிக்கும் எம்ஜிஆர் பிறகு அவரை காதலிப்பார்.
ஒரு கட்டத்தில் அவர்தான் தொழிலதிபர் ஜேபி என்று தெரிய வரும்போது சரோஜா தேவி எம்ஜிஆரை ஏற்க மறுப்பதுபோல் படத்தின் கதை இருக்கும். இந்த படத்தில் பங்களா உரிமையாளர் எம்ஜிஆரிடமே வாடகை வசூலிக்கும் அடாவடியான ஒரு கேரக்டரில் நாகேஷ் நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போது ஒரு சம்பவம் நடந்தது. 1965ம் ஆண்டு செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் 1966 ஜனவரியில் பொங்கலுக்கு அன்பே வா படத்தை வெளியிட வேண்டும் என்று எம்ஜிஆரிடம் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறியிருக்கிறார். அதற்கு வரும் பொங்கலுக்கு நான் ஆணையிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நான் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்எம் வீரப்பனிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.
அதன்பிறகு ஏவிஎம் சரவணனை சந்தித்த ஆர்எம் வீரப்பன், வருகிற பொங்கலுக்கு அன்பே வா படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள். நான் ஆணையிட்டால் படத்தின் ரிலீஸ் தேதியை நான் தள்ளி வைத்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆர்எம் வீரப்பன் தான் எம்ஜிஆரின் மேனேஜர். எம்ஜிஆர் சொன்னால் அவர் மறுக்கப் போவது இல்லை. ஏனென்றால் எம்ஜிஆரிடம் அவர் வேலை செய்பவர்.
ஆனால் தன்னிடம் வேலை செய்பவராக இருந்தாலும் கூட அவருக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்ற உயர்ந்த பண்பின் காரணமாக, அன்பே வா படம் ரிலீஸ் குறித்து வீரப்பனிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று எம்ஜிஆர் ஏவிஎம் சரவணனிடம் கூறியிருக்கிறார். அவரே தன்னிச்சையாக முடிவை சொல்லாமல் தவிர்த்துள்ளார். இதுபோன்ற உயர்ந்த குணம்தான் எம்ஜிஆரை இன்னும் மக்கள் மத்தியில் புகழ் பாட வைத்திருக்கிறது.





