வெற்றிமாறன் இயக்கத்தில், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வெளிவந்த படம் விடுதலை. அதுவரை காமெடி நடிகராக மட்டுமே நடித்திருந்த சூரி, இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி, படத்தில் மிக முக்கியமான வாத்தியார் கேரக்டரில் நடித்திருந்தார். படம் பெரிய அளவில், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து விடுதலை படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாதங்களாகியும் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இப்போது திருவள்ளூரில் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் பகல், இரவாக நடந்து வருகிறது. இன்னும் 32 நாட்கள் வரை ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை அவர் நடிக்கும் காட்சிகள் எதுவும் இன்னும் படமாக்கப்படவில்லை. அதாவது, விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பில் இதுவரை அவர் கலந்துக்கொள்ளவே இல்லை.
இந்நிலையில், சூரி புதிதாக நடிக்கும் கருடன் படப்பிடிப்பு, தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சமுத்திரக்கனி, சசிக்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், சூரியுடன் நடித்து வருகின்றனர். விடுதலை 2 படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது. ஏனெனில் கருடன் படப்பிடிப்பில், சூரி தாடி மீசையுடன் காணப்படுகிறார்.
திருவள்ளூரில் நடந்துவரும் ஷூட்டிங், முதல் நாள் காலையில் துவங்கினால், மறுநாள் காலை வரை தொடர்ந்து நடப்பதால், ஒரு நாள், ஒன்றரை நாள் இடைவெளி விட்டு விட்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது. படக்காட்சிகளை தொடர்ந்து வெற்றிமாறன் எடுத்துக்கொண்டே இருப்பதால், படக்குழுவினரே அசந்து போய் இருக்கிறார்கள்.
இதையடுத்து, விடுதலை 3 படம் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா என அவரிடமே சிலர் கேட்டுள்ளனர். அப்போது, அய்யய்யோ, நிச்சயமாக விடுதலை 2 பாகம்தான். அதற்கு மேல் முடியாது. இந்த படத்தை எப்போது முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன். தொடர்ந்து ஒரே படத்தில் பணிபுரிவது மிகப் பெரிய சிரமமாக உள்ளது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் வெற்றிமாறன்.





