இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் ஜிவி பிரகாஷ்குமார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி மியூசிக் டைரக்டராக மாறினார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகவும் மாறிய ஜீவி பிரகாஷ்குமார் பென்சில் திரிஷா இல்லேனா நயன்தாரா ஜெயில் நாச்சியார் சிவப்பு மஞ்சள் பச்சை செம டார்லிங் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த கிங்ஸ்டன் படம் அவரது 25வது படமாக இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
கடந்தாண்டில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ்குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இவர்கள் காதல் திருமணம் செய்து 11 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படி ஒரு பிரிவை அறிவித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியில் படித்த காலத்திலேயே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாகி வாழ்க்கையில் அவர்கள் கணவன் மனைவியாக இணைந்தவர்கள்.
கடந்த 2013ம் ஆண்டில் ஜீவி பிரகாஷ்குமார் சைந்தவி திருமணம் நடந்தது. சைந்தவி பின்னணி பாடகியாக பல படங்களில் பாடியிருக்கிறார். ஜீவி பிரகாஷ்குமார் இசையிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நட்சத்திர தம்பதிக்கு பெண் குழந்தையும் உள்ள நிலையில் 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக கடந்தாண்டில் அறிவித்தனர்.
ஆனால் இப்படி ஒரு அறிவிப்புக்கு பிறகும் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் சைந்தவி பாடுவதும் இசை கச்சேரிகள் அவர் பங்கேற்பதும் தொடர்கிறது. இதுகுறித்து ஜீவி பிரகாஷ்குமார், தொழில் ரீதியாக நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக மரியாதை வைத்திருக்கிறோம். அந்த மரியாதை காரணமாக ஒரே இடத்தில் ஒன்றாக பணிசெய்கிறோம், என்று விளக்கம் தந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ஜீவி பிரகாஷ்குமார், சைந்தவி இருவரும் நீதிபதி செல்வசுந்தரி முன்பு நேரில் ஆஜராகினர். அப்போது இருவரும் பிரிவதாக ஒருமனதாக கூறிய நிலையில், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். விவாகரத்து கேட்டு வாழ்க்கையில் பிரிய நினைப்பவர்கள், இப்படி ஒரே காரில் ஒன்றாக செல்கிறார்களே என ரசிகர்கள் பயங்கர குழப்பத்தில் உள்ளனர். இவர்களை புரிஞ்சுக்கவே முடியலையே என்றும் புலம்புகின்றனர்.





