எளிய மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலை கண்முன்னே காட்சிப்படுத்தி அதன் மூலம் குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் இயக்குனர் மணிகண்டன். காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், தனது முதல் திரைப்படத்திலேயே குழந்தைகளுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். மூச்சு முட்டும் நகர நெரிசலில், குருவிக்கூடு போல் இருக்கும் வீட்டில் வசிக்கும் கல்வியை இழந்த இரண்டு சிறுவர்கள், உயர்ரக உணவான ஒரு பீட்சாவை சாப்பிட ஆசைப்பட்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்திருப்பார் மணிகண்டன்.
இதன் பிறகு நடிகர் விதார்த்தை வைத்து, குற்றமே தண்டனை திரைப்படத்தை அவர் எடுத்தார். இதுவும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படமும், எதார்த்த வாழ்வியலை மிக அழகாக காட்டியது.
ஒரு விசாவுக்காக கதாநாயகன் படும் அல்லல்களை போகிற போக்கில் எளிமையாக கூறியிருப்பார் மணிகண்டன். கிட்டத்தட்ட இதன் கிளைமாக்ஸ் காட்சியும், காக்கா முட்டை படத்தின் காட்சியும் ஒன்று எனக் கூறலாம். பெரிய பிரச்சனைகளுக்கு சின்ன விஷயங்கள் தான் தீர்வாக இருக்கும் என்பதை மணிகண்டன் அழகாக கூறியிருப்பார்.
இதற்கு அடுத்ததாக அவர் கடைசி விவசாயி திரைப்படத்தை இயக்கினார். ஒட்டுமொத்த திரையுலகமும் இதனை தூக்கி வைத்துக் கொண்டாடியது. அந்த அளவுக்கு எதார்த்த பின்னணியில் முடிச்சு போட்டு இருந்தது இந்த திரைப்படம். இதற்காக தேசிய விருதையும் மணிகண்டன் பெற்றார். இப்படியான சூழலில் சென்னையில் அவர் குடும்பத்துடன் தங்கி இருக்க, உசிலம்பட்டி அருகே உள்ள அவரது சொந்த வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.
தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், 5 சவரன் நகை மற்றும் இரண்டு தேசிய விருதுகளும் காணாமல் போயிருந்ததாக மணிகண்டன் புகார் அளித்தார். கடந்த எட்டாம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், நேற்று அவரது வீட்டின் முன்பு ஒரு பாலிதீன் கவரில் திருட்டுப் போன தேசிய விருது மட்டும் வைக்கப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது. மேலும் அதில் இருந்த கடிதத்தில், ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு என்றும் எழுதப்பட்டிருந்தது. தேசிய விருதை திருடிய குற்ற உணர்ச்சியில் திருடர்கள் அதனை மீண்டும் வீட்டு வாசலில் தொங்கவிட்டு கடிதம் எழுதி சென்றிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





