தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் காமெடி குணச்சித்திரம் என எல்லாவிதமான கேரக்டரிலும் சிறப்பான நடிப்பை தந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்த அவர் இப்போது தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
சினிமா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ள விஜய் சேதுபதி கடைசி விவசாயி ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களை அவரே சொந்தமாக தயாரித்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதிலும் அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
கடந்தாண்டில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படம் பெரிய வரவேற்பை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி வருகிறார். அவர் பங்கேற்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவரது தனிப்பட்ட சமூக கருத்துகளை வெளிப்படையாக கூறி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரது இதுபோன்ற கருத்துகள் பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, அன்பான வாக்காள பெருமக்களே பார்த்து ஓட்டுப் போடுங்க தயவு செய்து சிந்திச்சு ஓட்டுப் போடுங்க. அப்புறம் ஓட்டுப் போடறது ரொம்ப முக்கியம். எப்பவுமே வாங்க நம்ம ஊர்ல ஒரு பிரச்னை காலேஜ்ல ஒரு பிரச்னை நம்ம நண்பருக்கு ஒரு பிரச்னை இல்லே நம்ம ஸ்டேட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் அவன் கூட சேருங்க.
நம்ம ஜாதிக்கு ஒரு பிரச்னை நம்ம மதத்துக்கு ஒரு பிரச்னை அப்படீன்னு சொல்றவன் கூட சேராதீங்க. அப்படி சொல்றவன் அத்தனை பேரும் நம்மளை தூண்டி விட்டுட்டு அவர் வீட்டுல போலீஸ் பாதுகாப்போட இருப்பான். நாமதான் மாட்டிப்போம். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க. வாக்காள பெருமக்களே, ஜாக்கிரத்தை ஐ லவ் யூ என்று விஜய் சேதுபதி அதில் பேசியிருக்கிறார்.





