நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இன்னும் 10 தினங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது, கேரளாவில் திருவனந்தபுரத்தில் இரு தினங்களாக நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
காவலன் படத்தில் நடித்த பின், 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், மீண்டும் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே, கேரளாவிலும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். லியோ படம் வெளியீட்டின் போது தியேட்டர்களின் முன் விஜய் ரசிகர்கள் போட்ட கொண்டாட்டத்தையும், ஆரவாரத்தையும் பார்த்து மலையாள முக்கிய நடிகர்களே அசந்து போய்விட்டனர்.
இப்போது கேரளாவில் ஷூட்டிங்கில் பங்கேற்க சென்ற விஜயை காண, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரசிகர் கூட்டம் பெரும்படையாக திரண்டு விட்டது. காரை முன்னும் பின்னும் நகர்த்த முடியாத அளவுக்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஒரு கட்டத்தில் கார் மீது முண்டியடித்த கூட்டத்தில் விஜய் பயணித்த கார் கண்ணாடிகள் உடைந்து, பக்கவாட்டு பகுதிகள் எல்லாம் நொறுங்கி, ஒடுங்கி, நசுங்கி பலத்த சேதமடைந்த காரின் வீடியோ காட்சிகள், சமீபத்தில் வைரலானது.
முதலில் இலங்கையில்தான் கோட் படத்தின் சில முக்கிய காட்சிகள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக டைரக்டர் வெங்கட்பிரபு இலங்கை சென்று ஒரு வாரம் தங்கி, பல இடங்களில் லொக்கேஷன் பார்த்துவிட்டு வந்தார். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்த செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கு படம்பிடிக்க திட்டமிட்ட காட்சிகள்தான் கேரளாவில், ஷூட் செய்யப்படுகின்றறன.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் கோட் படத்தின் முக்கிய காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்டேடியத்தை சுற்றிலும் சிஎஸ்கே அணி போஸ்டர்களையும், மகேந்திர சிங் தோனி புகைப்படங்களையும் ஏராளமாக ஒட்டியுள்ளனர். அதனால் இந்த படத்தில் இறுதி காட்சியில் சில நிமிடங்கள் தோனி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் இப்போது தோனி, ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்களில் முழு கவனம் செலுத்தி வருவதால், அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதியா எனத் தெரியவில்லை. ஆனால் விஜய் அழைத்தால் நிச்சயம் அவர் மறுப்பதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் இது வழக்கமான ஷூட்டிங் காட்சிக்காக ஒட்டப்பட்ட போஸ்டரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் கோட் படத்தில், தளபதியுடன் தல நடித்தால் அது செம மாஸ் ஆக இருக்குமே, என விஜய் ரசிகர்கள் அதிக ஆவலாக இருக்கின்றனர்.





