லோகேஷ் கனகராஜ் எடுத்த மாநகரம் படம் தவிர கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ வரை போதை சார்ந்த விஷயங்களே அவரது படத்தின் மையக் கருவாக இருந்திருக்கின்றன. அதுவும் அதுவும் விக்ரம், கைதி மற்றும் லியோ மூன்றுமே போதை காட்சிகளே அதிகம் இடம்பெற்ற படங்களாக அமைந்திருந்தன.
கைதி படத்தில், போலீஸ் உயரதிகாரிகள் அனைவரும், போதை வஸ்து கலந்து மதுபானத்தை குடித்து, மயக்கமடைந்த நிலையில் அவர்களது உயிருக்கே ஆபத்தான சூழலில் அவர்களை காப்பாற்றி, லாரியில் அள்ளிப் போட்டுக்கொண்டு கார்த்தி, லாரியை ஓட்டிச் செல்வதுதான் படத்தின் முக்கால்வாசி கதையாக இருந்தது.
விக்ரம் படத்திலும், பல டன் மதிப்புள்ள போதைப் பொருட்களை கண்டறிய பவானி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அவர்களை பிடிப்பதற்காக கமல், எந்நேரமும் போதை ஆசாமியாக நடித்திருப்பார். படத்தின் பல காட்சிகளில் கமல், மதுபான பாட்டிலுடன்தான் காட்சி தந்தார். மாஸ்டர் படத்திலும், பாதி வரை விஜய் எப்போதும் குடித்துக்கொண்டுதான் இருப்பார்.
இப்போது வெளியான லியோ படத்திலும், பல காட்சிகளில் மதுபானம் குடிக்கும் காட்சிகளே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அதைவிட சிகரட் புகைக்கும் காட்சிகள் மிக மிக அதிகம். வில்லன்களை காட்டும்போதெல்லாம் அவர்கள் சிகரட் புகைத்தபடியே வருகின்றனர். இறுதியில் விஜயும் சிகரட் புகைக்கும் காட்சி வருகிறது.
இதில் எந்த விதத்தில், புகைபிடிக்கும் பழக்கம் தவறானது என, இயக்குநர் விழி்பபுணரர்வு ஏற்படுத்தினார் என்பது புரியவில்லை. படம் முழுக்க அடுத்தடுத்து வரும் நபர்கள் புகையை திரை முழுக்க ஊதிக்கொண்டு இருக்க, புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பலரால், தியேட்டருக்குள் அமர்ந்திருக்கவே முடியவில்லை. எப்போது படம் முடியும் என்ற அவஸ்தை நிலையே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், போதை ஒழிப்பு விழிப்புணர்வு படங்களே என் நோக்கம் என்கிறார் லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் இறுதியில், அம்மாவிடம் எதைப்பற்றியும் சொல்லாதே என அப்பா விஜய் சத்தியம் கேட்க, நான் சிகரட் பிடிக்கிற விஷயத்தை அம்மாவிடம் சொல்லாதே என்கிறார் விஜய் மகனாக நடித்திருக்கும் அந்த டீன் ஏஜ் பள்ளி மாணவன். அதை கேட்கும் விஜய் எதுவும் கண்டிக்காமல் வாகனத்தை கிளப்புகிறார். இந்த ஒரு காட்சியே, எந்த அளவுக்கு லியோ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு படம் என்பதை தெளிவாக விளக்கி விட்டது என்கின்றனர் ரசிகர்கள்.





