தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து அதன் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பாலா. சேது திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமாக, நந்தா பிதாமகன் உள்ளிட்ட கிளாசிக் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் அமீர். மதுரையைச் சேர்ந்த அவர் படித்து முடித்துவிட்டு பாலாவிடம் உதவியாளராக சேர்ந்தார்.
சேது மற்றும் நந்தா திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய அவர், மௌனம் பேசியதே திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக அறிமுகப்படுத்தினார். சூர்யா த்ரிஷா லைலா நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் கை கொடுக்க, இன்று வரை அந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதன் பிறகு நடிகர் ஜீவாவை வைத்து ராம் படத்தை எடுத்தார் அமீர். முதல் திரைப்படத்திற்கு அப்படியே நேர்மாறாக, சைக்கோ திரில்லர் ஜானரில் எடுத்த இந்த திரைப்படம் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக ஜீவாவின் கதாபாத்திரம் வெளியே பலராலும் பேசப்படும் விதமாக இது அமைந்தது.
மௌனம் பேசியதே, ராம் திரைப்படத்திற்கு பிறகு அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். ஆண்டுதோறும் ஒரு சில தரமான வெற்றி படங்கள் ரிலீஸ் ஆனாலும், சில திரைப்படங்கள்தான் பத்தாண்டு 20 ஆண்டு அளவுக்கு நின்று பேசும். அப்படி ஒரு குறிஞ்சிப் பூ தான் பருத்திவீரன். சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான அந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய ஒரு ஏற்றத்தைக் கண்டது.
படத்தில் முத்தழகு ஆகவே பிரியாமணி வாழ, தேசிய விருதை பெற்றார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவன் படத்தை அவர் இயக்கினார். ஆனால் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து வடசென்னை படத்தில் இருந்து நடித்தார். தற்போது அமீர் நடிப்பில் மாயவலை என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனலுக்கு பேசிய அவர், மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் விக்ரம் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. அதில் கண்ணனாக வரும் நந்தா கதாபாத்திரத்தில், சூர்யாவின் நடிக்க வைக்க யோசித்து இருந்தேன். இந்த திட்டம் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கும் பிடித்திருந்தது. அந்த நேரம் தான் விக்ரம் கதாநாயகனாக கொஞ்சம் கொஞ்சமாக மேரலே வந்த சமயம். நானும் புதுமுக இயக்குனர் என்பதால் எனது இயக்கத்தில் அவருக்கு நடிக்க ஒரு தயக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து சூர்யா கதாநாயகனாக உள்ளே வந்தார் என்று தெரிவித்துள்ளார்.





