ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட விடாமுயற்சி திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்ததால் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இதனை எடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். கதையில் எந்த கவனமும் செலுத்தாமல் அஜித்திற்கான மாஸ் காட்சிகளை மட்டுமே நம்பி அவர் சூட்டிங் சென்று இருந்தார் என்றே கூற வேண்டும். படம் முழுக்க அஜித் புகழ் பாடும் காட்சிகளே இடம் பெற்றிருந்தன. அது மட்டுமல்ல ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒரே நேர்கோட்டில் படம் சென்றது.
மேலும் படத்தில் ரெட்ரோ பாடல்களை அதிகமாக பயன்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். காட்சிக்கு காட்சி ஏதாவது ஒரு பழைய பாடல் இருந்து கொண்டிருக்கும் வகையிலேயே, இது எடுக்கப்பட்டிருந்தது. இந்த யுக்தி ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தியது என்று கூட கூறலாம்.
இருப்பினும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலங்களில் குட் பேட் அக்லி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் பெரிய அளவு கல்லா கட்டவில்லை என்றே தெரிகிறது.
இப்படியான சூழலில் தற்போது அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைவதற்கே முடிவு செய்து இருக்கிறார். குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனமே இதனையும் எடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த தயாரிப்பு நிறுவனம் அந்த முடிவிலிருந்து பின் வாங்கியதாக பேசி கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் படத்தை தயாரிப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் அஜித்தின் சம்பளமே 200 கோடிக்கு மேல் இருக்க, பட்ஜெட் எப்படியும் 400 கோடியை தொட்டுவிடும் என்பதால் அந்த நிறுவனமும் இதிலிருந்து பின்வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓடிடி, சாட்டிலைட் உரிமம் போன்றவற்றில் பாதி தொகையை பார்த்தாலும் திரையரங்குகளை நம்பியே மீதி தொகை இருக்கிறது. இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் சற்று தயங்குகிறார்களாம். இதனால் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்று வெளியாகி இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட்டிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





