நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத் தயாரிப்பு விவகாரத்தில், ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை தரக்குறைவாக மரியாதையின்றி பேசினார். அமீருக்கு யார் ஆதரவாக வரப்போகிறார்கள் என அலட்சியமாக அவர் நினைத்த நிலையில் சசிக்குமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, கரு பழனியப்பன், பொன்வண்ணன் போன்றவர்களின் எதிர்ப்பும், கண்டனமும் ஞானவேல் ராஜாவை நிலைகுலையச் செய்துவிட்டது.
இந்த விவகாரத்தில் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி, இந்த பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்குமாறு, இப்போதைய தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்திருக்கிறார் ஞானவேல்ராஜா. பருத்திவீரன் பிரச்னையில், சூர்யா, கார்த்தி தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய், இயக்குநர் அமீருக்கு கொடுத்துவிடுங்கள் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன். இதுகுறித்து கேள்விப்பட்ட சூர்யா, 10 கோடி ரூபாயா என பலத்த அதிர்ச்சியில் இருந்திருக்கிறார். அன்றைய பணமதிப்பு நிலவரப்படி, இன்று 10 கோடி ரூபாய் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சமுத்திரக்கனி, கரு பழனியப்பன் ஆகியோர், தயாரிப்பாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடைசியாக 5 கோடி ரூபாய் கொடுத்துவிடுங்கள் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறிய நிலையில், அவ்வளவு முடியாது. ரூ. 3 கோடி என்றால் உடனடியாக செட்டில் செய்து பிரச்னையை சுமூகமாக முடித்துவிடலாம் என்று ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து பதில் வந்திருக்கிறது.
இந்த டீலுக்கு சமுத்திரக்கனி, சசிக்குமார், கரு பழனியப்பன், வெற்றிமாறன் போன்றவர்கள் சம்மதிக்கவில்லை. இதற்கிடையே இதுபற்றி தன் நண்பர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், எனக்கு வட்டி எல்லாம் வேண்டாம். நான் பருத்திவீரன் படத்தின் தயாரிப்புக்காக செலவு செய்த பணத்தை மட்டும் தந்தால் போதும் என்று கூறியிருக்கிறார். நீங்கள் இந்த விஷயத்தில் பேசாமல் இருங்கள். அன்றைய பண மதிப்புக்கு, இன்றைய பணமதிப்பு அடிப்படையில் இந்த தொகை உள்ளது, என்று அவரை சசிக்குமார், கரு பழனியப்பன் போன்றவர்கள் சமாதானம் செய்துள்ளனர்.
இதற்கிடையே பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த இயக்குநர் அமீர் தொடுத்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் தீர்ப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும் என்பதால், கோர்ட் தீர்ப்பின்படி என்ன கூறப்படுகிறோ, அப்படியே பணத்தை செட்டில் செய்துவிடலாம். இவர்கள் கூறுகிறபடி 10 கோடி எல்லாம் தரவேண்டாம் என்ற முடிவுக்கு இப்போது ஞானவேல்ராஜா, சூர்யா தரப்பு வந்துள்ளது.
மேலும், ஹாலிவுட் படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகியிருப்பதால், அதற்கு முன் வாடிவாசல் படத்தில் 10 நாட்கள் நடித்துவிடுகிறேன். அதற்குபின் ஆங்கில படத்தில் நடித்தால், ஏற்கனவே கமிட் ஆன படம் என, வாடிவாசலில் தொடர்ந்து நடிக்க முடியும் என்று வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார் சூர்யா. மார்ச் மாதத்தில் ஷூட்டிங் நடத்தலாம். நீங்களும், அமீரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை தான் ஷூட் செய்ய வேண்டும் என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இதற்கு சூர்யா மறுத்தால், வாடிவாசலில் இருந்து வெளியேற்றப்படுவார். சம்மதித்தால், வாடிவாசலில் அவர் நடிப்பார் என்பதுதான் இப்போதைய நிலவரம் என, சினிமா விமர்சகர் அந்தணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.





