கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பீக்கிற்கு சென்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட இரண்டு காதல் தோல்விகள் அவர் மீது பலரின் தனிப்பட்ட விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. அந்த இரண்டு காதல்களில் ஒரு காதலுக்காக மதம் மாறிய அவர் சினிமாவிலிருந்து விலகவும் முடிவு செய்தார்.
ஆனால் அந்த காதல் பாதியில் முடிய மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனார். அந்த இரண்டாவது இன்னிங்ஸில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகும் தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் ஜெயம் ரவியுடன் இறைவன், ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது 75ஆவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்
படங்களின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என்ற கொள்கையை உடையவர் நயன் தாரா. சூழல் இப்படி இருக்க ஷாருக்கானுடன் நடித்திருக்கும் ஜவான் படத்தின் ப்ரோமோஷனிலும் கலந்துகொள்வார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த அவர் அந்த ப்ரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை.
அதேசமயம் தனது பெயரில் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்தார். அதில் முதல் போஸ்ட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தோன்றி வந்துட்டேனு சொல்லு என்ற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் அவர் கணக்கு ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே அவருக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்தது தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, முதலில் நயனிடம் ஜவான் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளுமாறு ஷாருக்கும், அவரது மனைவியும் கேட்டுக்கொண்டார்களாம். ஆனால் தன்னால் அது மட்டும் முடியாது வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றாராம் நயன்.
இதனையடுத்து சரி நீங்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் அட்லீஸ்ட் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்து அதன் மூலமாவது படத்தை ப்ரோமோட் செய்யுங்கள் என்று கேட்டதற்கிணங்க நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கை ஓபன் செய்தாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





