இயக்குநர் அமீர் குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஒரு நேர்காணலில் மிகவும் தரக்குறைவாக பேசியது, தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. பருத்திவீரன் படத்தின் தயாரிப்பு விஷயம், பணம் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரு சிறந்த படைப்பாளியை தரம்கெட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு. பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன், கவிஞர் சிநேகன் உள்ளிட்ட பலரும், ஞானவேல் ராஜாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பருத்திவீரன் போன்ற சிறந்த படைப்பை தந்த அமீரை இப்படி தரம்தாழ்த்தி பேசுவதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது, ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தங்களது பதிவுகளில் வலியுறுத்தினர்.
இதையடுத்து நேற்று, ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக கூறியிருந்தார். இந்த அறிக்கை போலியான வருத்தம் கொண்டதாக இருப்பதாக இயக்குநர்கள் சசிக்குமார், கரு பழனியப்பன் தங்களது பதில் பதிவை செய்திருந்த நிலையில், இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு பதில் அறிக்கை தந்திருக்கிறார்.
சமுத்திரக்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும். அன்னைக்கு கொடுக்காமல ஏமாத்தீட்டு போன பணத்தை ஒத்தை பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா, கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியிருக்குது.
அப்புறம் பருத்தி வீரன் படத்துல வேலை பார்த்த நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம், அவங்க எல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே, காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பருத்தி வீரன் நடித்த நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருப்பதை, அந்த படத்தில் பணிபுரிந்த சமுத்திரக்கனியே வெளிப்படையாக கூறியிருக்கிறார். எனவே, 17 ஆண்டுகளாக சம்பளம் தராமல் இருப்பதும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் அல்ல. பல பிரச்னைகள் இருந்தாலும் இதில் அமீர் கவனமாக இருந்திருக்க வேண்டும். எனினும், இனியாவது சம்பள பாக்கியை அவர் உடனடியாக பட்டுவாடா செய்ய முன்வர வேண்டும்.





