கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலே உழைத்தார் சங்கர். ஆனால் அது எதுவுமே படத்தில் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கும் ஆளானது.
இதுபோக இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை தொடங்குவதற்கும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மணிரத்னத்துடன் இணைந்து தக் லைப் திரைப்படத்தை தற்போது முடித்திருக்கிறார் கமல்ஹாசன்.
இருவரும் இணைந்து கொடுத்த நாயகன் திரைப்படம் இப்போதும் பலருக்கு ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது. அதன் பாடல்களும் சரி, காட்சி அமைப்பும் சரி… ஒவ்வொரு திரை மொழியும் மிகவும் நுணுக்கமாகவும், கவனிக்கத்தக்க வகையிலும் எடுக்கப்பட்டு இருந்ததால் நாயகனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
படத்தில் சக்திவேல் நாயக்கர் ஆக வாழ்ந்த கமல்ஹாசனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இணை மீண்டும் இணைந்து இருக்கிறது. முதலில் கமல்ஹாசன் உடன் ஜெயம் ரவி துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கால் சீட் பிரச்சனை ஏற்பட்டதால் அவர்கள் படத்தில் இருந்து விலகினார்கள்.
பிறகு அவர்களுக்கு பதில் வந்தார் சிலம்பரசன். படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அவர் கமலின் மகனாக நடிப்பதாகவும் இருவருக்கும் இடையே இருக்கும் மோதல் தான் இந்த திரைப்படத்தின் கதை கரு என்றும் சிலர் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல அசோக் செல்வனுக்கும் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தக் லைப் படத்தை விஜய் டிவி நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோல் ஓ டி டி ஒளிபரப்பிற்காக நெட் பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்திற்கு 150 கோடி ரூபாய் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





