கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான திரைப்படம் நாயகன். கமலின் திரை உலக வாழ்க்கையிலும் சரி, மணிரத்னத்தின் இயக்கத்திலும் சரி இருவருக்கும் மிகப்பெரிய உயரத்தை அந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது. படத்தில் வேலு நாயக்கர் ஆக வாழ்ந்த கமல்ஹாசன், தேசிய விருதை தட்டிச் சென்றார்.
இப்படியான சூழலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
இந்த திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், ஜோ ஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அவர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்து வருகிறது. அனேகமாக அதில் சிம்பு நடிக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சென்னையில் தக் லைப் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சைபீரியாவில் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கிய நிலையில் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் கமல், மாநிலங்களவை எம்பி சீட்டையும் வாங்கி இருக்கிறார். அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய இருப்பதால், தக் லைப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாக தெரிகிறது. தேர்தல் முடிந்த பிறகு இனி படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது.





