தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான தீனா கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இதில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய இமேஜை ஏற்படுத்திய படமாக துப்பாக்கி படம் இருந்தது.
இதில் மேஜர் ஜெகதீஷ் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் இராணுவ வீரராக நடித்திருப்பார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். ஜெயராம் சத்யன் மனோபாலா வித்யுத் ஜம்வால் உளளிட்ட பலர் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆக்சன் படமாக இருந்தது. பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
தீவிரவாத கும்பல் ஸ்லீப்பர் செல்களாக மாறி நாட்டில் பல கலவரங்களை பிரச்னைகளை ஏற்படுத்துவதுதான் படத்தின் மையக்கதை. இதில் விடுமுறையில் மும்பைக்கு வரும் ராணுவவீரர் விஜய் எப்படி கண்டுபிடித்து அந்த ஸ்லீப்பர் செல் கும்பலை கூண்டோடு அழிக்கிறார் என்பதுதான் இந்த படம். துப்பாக்கி 2ம் பாகமாக வெளிவர வேண்டும் என்பதே நீண்ட காலமாக ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள மதராஸி படம் ஏறக்குறைய துப்பாக்கி படத்தின் 2ம் பாகமாக தான் இருக்கும் என்ற லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் நடித்த வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால்தான் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.
மதராஸி படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸூம் இந்த படத்தை கஜினி துப்பாக்கி படங்களின் கலவையாக தான் உருவாக்கி இருக்கிறேன் என்றும் வெளிப்படையாக கூறியும் இருக்கிறார். அதனால் இந்த படம் துப்பாக்கி படத்தின் 2ம் பாகமாக தான் உருவாகி இருக்கிறது என்று தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேரடியாக 2ம் பாகமாக இல்லாவிட்டாலும் படத்தின் காட்சிகள் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தி கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனிடம், நடிகர் விஜய் துப்பாக்கியை கொடுத்து விட்டார். இப்போது துப்பாக்கி படத்தின் 2ம் பாகமாக வெளிவர உள்ள மதராஸி படத்திலும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். துப்பாக்கி பட வில்லனே இதிலும் வில்லனாக வருகிறார். அதனால் மதராஸி, துப்பாக்கி படம் போல ஒரு சூப்பர் ஹிட் தரும் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





