இந்திய மக்களின் வாழ்க்கையில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக சினிமா மாறிவிட்டது. பொழுதுபோக்காக கருதப்பட்ட சினிமா மனித வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் டாப் 10 நடிகர்கள் யார் என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மலையாள நடிகர்களில் ஒருவரது பெயர் கூட இல்லாதது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
மக்களையும் சினிமாவையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்கிற சூழலில் மக்கள் வாழ்கின்றனர். தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பும் ஆர்வமும் வைத்திருக்கின்றனர். நமது நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஜெயிக்க வைத்து முதல்வராக்கி அழகு பார்க்கும் பழக்கம் காலம் காலமாக தொடர்கிறது.
அந்த வகையில் தெலுங்கில் என்டிஆர் தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் இப்போது சமீபத்தில் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள நடிகர் விஜய் வரை இது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் டாப் நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பிரபலமான நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் பட்டியல் தந்துள்ளது.
இதில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த இப்போதைய தமிழக முதல்வர் விஜய் 4ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்துள்ளது. இந்த டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் பிரபாஸ் நம்பர் 1 நடிகராக இருக்கிறார். அடுத்து இந்தி நடிகர்கள் ஷாருக்கான் அக்சய் குமார் சல்மான்கான் ரன்வீர் சிங் ஆகியோர் உள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு ராம்சரண் ஜூனியர் என்டிஆர் அல்லு அர்ஜூன் ஆகியோர் உள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற்றுள்ளனர். தென்னிந்திய படங்கள் மற்ற மொழி மாநிலங்களிலும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் யதார்த்த படங்களை எடுக்கும் மலையாள திரை உலகில் இருந்து ஒரு நடிகர் கூட இடம்பெறவில்லை. குறிப்பாக மோகன்லால் மம்முட்டி பகத்பாசில் துல்கர் சல்மான் பிரித்விராஜ் என யாரும் இந்த பட்டியலில் இல்லை. தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா படங்களாக உலா வருகின்றன. ஆனால் மலையாள படங்கள் பான் இந்தியா அளவுக்கு செல்லாதது மலையாள நடிகர்கள் இந்த பட்டியலில் இல்லாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.





