சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சர்ச்சையை குறித்து பல பிரபலங்களும் சினிமா பத்திரிக்கையாளர்களும் யூட்யூப் சேன்னல்களில் பேட்டியளித்து வருகின்றனர்.

ஒரு சிலர், “விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?” என கேட்கின்றனர், ஒரு சிலரோ, “ரஜினியை விட இப்போது விஜய்க்குதான் அதிக மார்க்கெட் இருக்கிறது. ஆதலால் விஜய்தான் சூப்பர் ஸ்டார்” என்று கூறுகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு எல்லாம் “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டி ஸ்டோரியைச் சொல்லி முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஏவிஎம் நிறுவனம் ஒரு முறை ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்கும்போது அதிக சம்பளம் தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சம்பளம் அதிகமாக இருப்பதாக கூறி ரஜினிகாந்த் அந்த சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார். இப்போது உள்ள நடிகர்கள் இதனை செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ரஜினிகாந்த் யாருக்கும் தன்னால் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என நினைப்பார். அப்படியே நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும் கூடுமான வரையில் அதனை ரஜினிகாந்த் சரி செய்து விடுவார். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் அவரவர்களின் திரைப்படங்கள் வெற்றிபெற்றுவிட்டால் அது தன்னுடைய சொந்த வெற்றியாக பார்க்கிறார்கள். தோல்வியடைந்து விட்டால் அந்த தயாரிப்பாளர்களின் பக்கம் தலையே காட்டாமாட்டிக்கிறார்கள்” எனவும் அந்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





