தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சூர்யா. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு பெரிய வெற்றிப் படங்களே இல்லை. குறிப்பாக கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை அவரது படங்கள் பெரும்பாலும் தோல்வி படங்களாகவே இருந்து விட்டன. இது சூர்யா ரசிகர்களை விரக்தியில் தள்ளியது.
தானா சேர்ந்த கூட்டம் மாசு என்கிற மாசிலாமணி எதற்கும் துணிந்தவன் காப்பான் அஞ்சான் பசங்க 2 சிங்கம் 3 கங்குவா 24 என்ஜிகே என 10 படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்தன. அதுவும் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. எனினும் சூர்யா அவரது படங்களில் எல்லாமே திறமையான அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். ஆனால் திரைக்கதை இல்லாததால் அந்த படங்கள் ஜெயிக்கவில்லை.
கடந்தாண்டில் மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் வணிக ரீதியான வெற்றிப் படம்தான் என்றாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
இதற்கிடையே இந்தியில் நடிகர் சூர்யா கர்ணா என்ற படத்தில் நடிப்பதாக இருந்து அந்த படம் திடீரென கைவிடப்பட்டது. ஆனால் சமீபத்தில் பேசிய அந்த படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ், கர்ணா படம் டிராப் ஆகவில்லை. மீண்டும் அந்த படத்தை இயக்க உள்ளேன். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்காக 6 பாடல்களை தயார் நிலையில் வைத்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக சூர்யாவின் படம் எதுவும் வெளியாகவில்லை. வருகிற 19ம் தேதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதே போல் நடிகர் சூர்யா நடிகை மமிதா பைஜூ நடித்த சூர்யாவின் 46வது படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கபடவில்லை. வருகிற 15ம் தேதி மகா சிவராத்திரி நாளில் சூர்யா 46 படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி போன்ற ஒரு கேரக்டரில் நடிகர் சூர்யா மீண்டும் நடித்திருப்பதாக தெரிகிறது.





