90ஸ் கிட்ஸ்களின் மிக ஃபேவரைட் நடிகராக இருந்தவர்தான் பிரசாந்த். 90களில் வெளியான செம்பருத்தி திரைப்படம்தான் பிரசாந்திற்கு மிகப்பெரிய ஒரு உச்சத்தை கொடுத்தது. அங்கிருந்து, பயணமான பிரசாந்த் பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுக்க தொடங்கினார். சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவருக்கு ரசிகர் படை பெருக ஆரம்பித்தது.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்கள் கொடுத்தாலும் அவருக்கு அடுத்த திருப்புமுனையாக அமைந்தது ஜீன்ஸ் திரைப்படம். சங்கர் இயக்கத்தில் இரட்டை சகோதரராக நடித்து பட்டையை கிளப்பினார். ஜீன்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற, பிரசாந்தின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு சென்றது. தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், ஸ்டார் என வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார்.
ரசிகர்களால் டாப் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் வரிசையில் நிச்சயம் பிரசாந்த் இருப்பார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் நடிகருக்கு தலைகீழாய் மாறிப்போனது. திருமணம் முடிந்ததும் அது தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து இருந்ததால், திரைத் துறையில் இருந்து சற்று விலகலானார் பிரசாந்த்.
அது மட்டுமல்ல அவர் தேர்வு செய்து நடித்த திரைப்படங்களும், வெற்றியைப் பெற முடியாமல் தவித்தன. அந்த சமயத்தில் அவர் நடித்த ஆயுதம், தகப்பன் சாமி, ஜாம்பவான் என அனைத்து திரைப்படங்களுமே வசூலை பெற முடியாமல் தவித்தன. இதனால் பிரசாந்தின் திரை உலக பயணம் தலைகீழாய் மாறி போனது.
இதனைத் தொடர்ந்து திரை உலகை விட்டு விலகியே இருந்த அவர், கடந்த ஆண்டு மீண்டும் உள்ளே வந்தார். 2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தின் உரிமை பெற்று அதை தமிழில் அந்தகன் என்னும் பெயரில் நடித்தார். சஸ்பென்ஸ் நிறைந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.
பிரசாந்திற்கும் இது ஒரு டீசன்ட் என்ட்ரியாக அமைந்தது. இப்படியான சூழலில்தான் தற்போது மீண்டும் ஒரு ரீமேக் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார் பிரசாந்த். தெலுங்கில் வெற்றி பெற்ற, கோர்ட்டு படத்தைதான் அவர் தமிழில் கொண்டுவர முயற்சித்து வருகிறாராம். தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் மற்றும் தேவயானி மகள் இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





