ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். தி கோட் என்ற இந்த படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மொத்தம் 385 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானது. இதில் 200 கோடி ரூபாய் விஜய்க்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் ரிலீஸ் ஆன துவக்க நாட்களில் ராஜதுரை என்ற படத்தின் ரீமேக் இது என்று ஒரு தகவல் பரவியது. விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் 1993ம் ஆண்டில் இயக்கிய படம்தான் ராஜதுரை. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த், அவரது மகனாக மற்றொரு விஜயகாந்த் நடித்திருந்தனர். வில்லன் ஆனந்தராஜ், விஜயகாந்த் மகனை சிறுவயதிலேயே கடத்தி சென்று வளர்த்து அதன்பிறகு அப்பாவுடன் மகன் விஜயகாந்தை மோத விடுவதே இந்த படத்தின் கதை.
அதேபோல் தி கோட் படத்தின் கதையும் இருந்ததால், ராஜதுரை படத்தின் ரீமேக் தான் தி கோட். விஜய் அப்பா எஸ் ஏ சி இயக்கிய படத்தை சுட்டு, மகனை நடிக்க வைத்து விட்டார் என்று வெங்கட் பிரபு மீது விமர்சனம் எழுந்தது. ஆனால் 2 நாட்களுக்கு முன் இதுபற்றி பேசிய வெங்கட் பிரபு, ராஜதுரை படத்தை நான் முன்பே பார்க்கவில்லை. முன்பே பார்த்திருந்தால் இன்னும் பெஸ்ட்டாக தி கோட் படத்தை தந்திருப்பேன் என்று கூறியதும் வைரலானது.
இந்நிலையில் தி கோட் படம் உலகம் முழுவதும் மொத்தம் 455 கோடி ரூபாய் வசூலித்தது என்று படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இந்த படத்தின் தமிழ்நாடு ஷேர் ஆக ரூ. 100 கோடியும் கிடைத்திருந்ததால், சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வினியோகஸ்தர் ராகுல், நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் வைரலானது.
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் உலகம் முழுவதும் 455 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 217 கோடி ரூபாய் வசூலித்தது . ஆனால் கடந்த ஆண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம், தமிழ்நாட்டில் மட்டும் 232 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லியோ படத்தைக் காட்டிலும் தி கோட்படம் 15 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூலில் குறைந்து போயுள்ளது.
இரட்டைப் பிறவி, நரபலி போன்ற மூடநம்பிக்கை கதையை மையப்படுத்திய லியோ படம், தமிழ்நாட்டில் 232 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், தி கோட் படம், அதை விட 15 கோடி ரூபாய் வசூலில் குறைந்து, லியோ படத்தின் தமிழ்நாடு வசூல் சாதனையை முறியடிக்கவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இந்த படம் லியோ அளவுக்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





