தமிழ் சினிமாவின் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் ஒரே நேரத்தில் அறிமுகமானவர் சசிகுமார். அவரது முதல் திரைப்படமாக வெளியான சுப்ரமணியபுரம் கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான், சுப்பிரமணியபுரம் சாயலில் ஏராளமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தன.
இதனால் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் ஒரு டெம்ப்ளேட் என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து, ஈசன் திரைப்படத்தை இயக்கிய சசிகுமார் அதன் பிறகு தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவருக்கு சுந்தர பாண்டியன், குட்டிப்புலி ஆகிய ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் கை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன. ஒரே சாயல் கொண்ட கதையில் மட்டுமே சசிகுமார் நடிப்பதாகவும், அவர் இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர். சொல்லப்போனால் சில திரைப்படங்கள் சசிகுமாருக்கு திரையரங்குகளில் வந்தது கூட இங்கு பலருக்கும் தெரியாது.
இப்படியான சூழலில் அயோத்தி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. மந்திரமூர்த்தி இயக்கிய அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற, சசிகுமாரும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு அடுத்ததாக நந்தன் திரைப்படம் கை கொடுத்தது.
இப்படியான சூழலில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தின் கதை தான் இது. அதனை மிகுந்த யதார்த்தமாகவும், குடும்ப உறவின் ஆழத்தையும் மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
படத்தில் சசிகுமாருக்கு மனைவி ஆக நடித்திருக்கும் சிம்ரனும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். யோகி பாபு ரமேஷ் திலக் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பான ரோலில் நடிக்க, டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வார விடுமுறையில், அந்தத் திரைப்படம் முன்பதிவில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





